கறம்பக்குடி அருகே அக்னி ஆற்றில் தடுப்பணை கட்டுமான பணி நிறைவு.

Unknown
0

கறம்பக்குடி அருகே அக்னி ஆற்றில் தடுப்பணை கட்டுமான பணி நிறைவு.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழை குறைந்து வருவதால், நிலத்தடிநீர் மட்டமும் குறைந்து வருகிறது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி காவிரி ஆற்றுப் படுகை பகுதியாக இருப்பதால் இப்பகுதியில் கனமழை காலங்களில் கடலில் கலக்கும் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லையான கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி-நெய்வேலியில் அக்னி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 2015-ல் நெய்வேலியில் அக்னி ஆற்றின் குறுக்கே ரூ.7 கோடியே 45 லட்சத்தில் தடுப்பணை கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் தடுப்பணை கட்டப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன.

விவசாயிகள் மகிழ்ச்சி

மேலும், மதகுகளும் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது, கரை பலப்படுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றின் இரு கரைகளிலும் திருமணஞ்சேரி, கறம்பக்குடி சாலையில் இருந்து பிரிந்து தடுப்பணைக்கு செல்லும் வகையில் கிராவல் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த அணை கட்டப்பட்டதன் மூலம் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து கறம்பக்குடி பகுதி விவசாயிகள் கூறும்போது, பருவமழை குறைந்து வருவதாலும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. கன மழையின்போது அக்னி ஆற்றின் வழியாக கடலில் சேரும் தண்ணீரை தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் புதிய தடுப்பணை மூலம் தேவைக்கு ஏற்ப தேக்கி வைக்கலாம். அதில் இருந்து அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களிலும் தண்ணீரை நிரப்பலாம். இதன் மூலம் இப்பகுதியில் நேரடியாகவும், ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் சுமார் 500 ஏக்கரில் பாசனம் செய்யலாம். தடுப்பணைக்காக இருபுறமும் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ள கரைகளில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க அப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top