பேராவூரணி வட்டத்தில் நேரடி நெல் விதைப்பு செய்திட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்.

Unknown
0


பேராவூரணி வட்டார விவசாயிகள் அனைவரும் நேரடி நெல்விதைப்பு செய்யுமாறு பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பேராவூரணி வட்டாரத்தில் கடந்த காலங்களில் மிக குறைந்த பரப்பளவில் மட்டுமே நேரடி நெல்விதைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கடைமடை பகுதியான இப்பகுதியில் நாற்று வித்து நடவு மேற்கொள்ள கல்லணைக் கால்வாய் பாசனம் இம்மாதத்திற்குள் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் அனைத்து விவசாயிகளும் உடனே புழுதி உழவு மேற்கொண்டு நேரடி நெல் விதைப்பு செய்யலாம்.

நேரடி நெல் விதைப்பிற்கு செப் மாதம் முழுவதும் ஆடுதுறை 50, கோ.ஆர்.50, ஆடுதுறை 49, ஆடுதுறை 39, பிபிடி 5204 போன்ற மத்திய கால நெல் ரகங்களையும் செப்டம்பர் இறுதிவரை நேரடி நெல்விதைப்பு செய்யலாம். செய்ய இயலாதவர்கள் அக்டோபர் 20 க்கு பிறகு மாத இறுதிவரை குறுகிய கால ரகங்களான ஆடுதுறை 45, ஆடுதுறை 43 மற்றும் அம்பை 16 போன்ற ரகங்களைப் நேரடியாக விதைக்கலாம். அக்டோபர் மாதத்திற்கு பிறகு நேரடி நெல் விதைப்பு செய்யக்கூடாது. நேரடி நெல் விதைப்பு செய்வதால் பாசன நீரை குறைத்து அதிக மகசூல் எடுக்கலாம்.

குறைந்த எண்ணிக்கையிலான கூலி தொழிலாளர்கள் மட்டும் போதும். நாற்றங்கால் தயாரித்தல், பராமரித்தல், நாற்றுக்களை பறித்தல், நடவு செய்தல் போன்ற பணிகள் இல்லை. நேரடி நெல் விதைப்பில் நெல் பயிரின் வேர்கள் மேலாக வளர்ச்சிப்பெற்று அதிக தூர்கள் வெடித்து அதிக கதிர்கள் மற்றும் மணிகள் உருவாகின்றன. நடவு முறையில் பயிரிடப்படும் நெல் பயிரை விட நேரடி நெல்விதைப்பின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிரானது 7 முதல் 10 நாட்களுக்கு முன்பாக முதிர்ச்சியடைகின்றன. நாற்றுவிட்டு நடவு செய்யும்போது ஏற்படும் இடமாறுதல் அதிர்ச்சியினால் காலதாமதமாக புதிய வேர்கள் உருவாகின்றன.

இதுபோன்ற இடமாறுதல் அதிர்ச்சி நேரடி நெல்விதைப்பில் இல்லாததால் புதிய வேர்கள் உருவாகி தூர்கள் அதிகஅளவில் வெடிக்கின்றன. கடைமடை பகுதி விவசாயிகள் கல்லணைக் கால்வாய் தண்ணீர் பெறுவதற்கு முன் புழுதி உழவு மேற்கொண்டு நேரடி நெல் விதைப்பு செய்து கல்லணைக் கால்வாய் பாசனம் கிடைக்கப்பெற்றவுடன் நடவு வயலுக்கான தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்கலாம். பூச்சிநோய் தாக்குதல் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. ஒருசத பொட்டாசியம் குளோரைடு கரைசல் கொண்டு விதை நேர்த்தி செய்து நெல் விதைப்பு செய்யும் பட்சத்தில் பயிர் வறட்சியை தாங்கி வளர்கின்றன. நடவு பயிரைக்காட்டிலும் நேரடி நெல் விதைப்பில் 25 சதம் முதல் 30 சதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top