தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவிகளே தயாரித்த செயற்கைகோளை ராட்சத பலூன் மூலம் விண்ணில் செலுத்தினர்.

IT TEAM
0

தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ளது பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் பயிலும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15 மாணவிகள் சேர்ந்து சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்று “எஸ்.கே.ஐ. என்.எஸ்.எல்.வி.-9 மணியம்மையார் சாட்” என்ற பலூன் செயற்கைகோளை வடிவமைத்தனர்.

இந்த செயற்கை கோளை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வேலுசாமி தலைமை தாங்கினார். சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குனர் ஸ்ரீமதிகேசன், பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் வீ.அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக பதிவாளர் தனராஜ் வரவேற்றார்.

இந்திய விண்வெணி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமிஅண்ணாதுரை கலந்து கொண்டு மாணவிகளின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்கள் புத்தகத்தை மட்டும் படிப்பது படிப்பல்ல. இது போன்ற முயற்சிகளிலும் ஈடுபடுவது பாராட்டுக்குரியது. ஆசியாவிலேயே முதன்முறையாக இந்த பல்கலைக்கழக மாணவிகள் கண்டுபிடித்த இந்த பலூன் செயற்கை கோள் விண்வெளிக்கு அருகில் சென்று ஆய்வு பணியில் ஈடுபட உள்ளது.

பெண்கள் முன்னேறி வருவதன் முதற்கட்டம் தான் இந்த செயற்கை கோள். இந்த முயற்சிக்கு அடுத்து இதில் ஈடுபட்ட 15 மாணவிகளும் ரஷ்யாவுக்கு சென்று சிறப்பாக விண்வெளி துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட முடியும். பெண்களால் முடியும், அதுவும் தமிழச்சிகளால் முடியும் என சாதித்து காட்டி உள்ளனர் இந்த மாணவிகள். இது போன்ற முயற்சிகளில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவது போல் இனி பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஈடுபட இந்த மாணவிகளின் முயற்சி உத்வேகத்தை அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பல்கலைக்கழக மைதானத்தில் இருந்து பகல் 11.30 மணிக்கு ராட்சத பலூன் செயற்கை கோள் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோளானது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனுடன் 70 ஆயிரம் அடி உயரத்தில் வான்வெளிக்கு சென்று அங்குள்ள வெப்பநிலை காரணமாக உருமாற்றம் பெற்று பாராசூட் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 40 கி.மீ. சுற்று வட்டாரத்தில் தரையிறங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செயற்கை கோள் 1 லட்சத்து 3 ஆயிரம் அடி உயரம் சென்று சுமார் 4 மணி நரம் கழித்து தஞ்சை அருகே சுங்காந்திடல் என்ற கிராமத்தில் வயலில் பாராசூட் மூலம் தரையிறங்கியது. இந்த செயற்கை கோள் விண்ணை நோக்கி செல்லும் போதும், கீழே தரையிறங்கும் போதும் அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உதவியுடன் வான்வெளியின் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், அங்குள்ள வாயுக்களின் தன்மை குறித்தும் கண்டறிந்து நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

இதனுடன் ஜி.பி.எஸ். மற்றும் வெப்பநிலை கணக்கிடும் கருவி மூலம் அட்சரேகை, உயரம், திசைவேகம் ஆகியவற்றை கணக்கிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தியதால் பலூன் செயற்கை கோள் எங்கு செல்கிறது என பேராசிரியர்களும், மாணவர்களும், கணினி உதவியுடன் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

இதனை ஆசியா புக்ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தினர் சாதனையாக பதிவு செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை ஸ்ரீவித்யா நன்றி கூறினார்.

நன்றி: தினத்தந்தி
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top