கொடுக்காபுளி பயன்கள்.

0

நம் பால்ய வயதுகளை இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றியதில் எத்தனையோ உணவுப்பொருட்களுக்கு பங்கு உண்டு. அவற்றில் மறக்க முடியாத மகத்துவம் கொண்டது கொடுக்காப்புளி. அதெல்லாம் ஏதோ சிறுபிள்ளைகளின் விளையாட்டுத்தீனி என்று நினைத்துவிடாமல், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரசித்து உண்ணுங்கள். இன்னும் சொல்லப் போனால் தேடிப்பிடித்துக் கூட உண்ணுங்கள்’’ என்று வலியுறுத்துகிறார் இயற்கை மருத்துவர் இந்திரா தேவி. கொடுக்காப்புளியில் அப்படி என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்பதையும் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘கொடுக்காப்புளி சற்று துவர்ப்பாகத்தான் இருக்கும். இதற்கு கோண புளியங்கா, சீனி புளியங்கா என பல பெயர்கள் உண்டு. இதன் தாவரவியல் பெயர் Pithecellbium Dulce. இது Fabaceae என்கிற பட்டாணி இனத்தை சேர்ந்தது). கொடுக்காப்புளி பசிபிக் கடலோரப் பகுதியில் அதிகம் விளைகிறது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது. ஆங்கிலத்தில் Monkey Pod மற்றும் Manila tamarind என்ற பெயர்களும் உண்டு. கொடுக்காப்புளி மரமானது 10 முதல் 15 மீட்டர் தூரம் வளரும் தன்மை உடையது. இதன் மரம், கிளைகள் ஆங்காங்கே முள், முள்ளாக காணப்படும். இதன் பூக்கள் பச்சைவெள்ளை நிறமாகும்.

கொடுக்கப்புளியை தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் சாப்பிடாமல் இருந்திருக்கவே முடியாது என்றுகூட சொல்லலாம். கொடுக்காப்புளி மரமானது வீடு, காடு, கரை, தோட்டம், துரவு, வாய்க்கால், வரப்பு என எல்லா இடங்களிலும் நன்றாக வளரக்கூடியது. வெப்பமண்டல பகுதியில் வளரக்கூடிய ஒரு மரம்தான். கோடை விடுமுறை காலங்கள் நெருங்க நெருங்க கொடுக்காப்புளி மரங்கள் காய்க்கத் தொடங்கும். சிவந்த கொடுக்காப்புளிகளை அணில்கள் அல்லது பறவைகள் தின்றுவிடும். ஓரளவு பழுத்த பழங்கள் மட்டும் தான் நமக்கு கிடைக்கும். கொடுக்காப்புளியை காய்களாக இருக்கும்போதே பார்த்து வைத்து அது பழுக்கும் வரை காத்திருந்து பறித்து உண்டால் நன்றாக இருக்கும்.

இயற்கை மருத்துவத்தில் கொடுக்காப்புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டு பரிந்துரைக்கப்படுகிறது. அது செரிமானத்தை மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் கருப்பை நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வாதநோய் மற்றும் மூட்டு வலிக்கும் மருந்தாக கொடுக்கப்படுகிறது. உடற்சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காப்புளி தரப்படுகிறது. உடல் எடை குறைய மிக அற்புதமான மருந்தாக கொடுக்காப்புளியை இயற்கை மருத்துவம் பரிந்துரைக்கிறது. குடல் அழற்சி, பெருங்குடல் தொடர்பான எந்த பிரச்னைகளுக்கும் இது நல்ல மருந்தே. கொடுக்காப்புளி புண்களை குணப்படுத்தும். மருத்துவர்கள் இதை அறிமுகப்படுத்திய பிறகு இது விற்பனைப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சுவையின் அடிப்படையில் கொடுக்காப்புளியின் வகை,காயாக இருந்தால் துவர்க்கும். பழமாக இருந்தால் துவர்ப்போடு இனிக்கும்.

ஊட்டச்சத்து டேட்டா

கொடுக்காப்புளியில் அதிகமாக வைட்டமின் சி அதிகம் நிறைந்திருக்கிறது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ் உருவாகாமல் தவிர்த்து புற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும். இது Anti oxidant டாக செயல்படுகிறது. பொட்டாசியம் மற்றும் கால்சியம் எலும்புகளையும், பற்களையும் பலப்படுத்தும். பாஸ்பரஸ் செல்களை புத்துயிர்க்கிறது. இரும்புச்சத்து உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியைக் கொடுக்கும். மேலும் வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் B6 போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. நரம்பு மண்டலத்தை ஊக்கப்படுத்துகிறது. இது தோல், நகம் மற்றும் முடியை வலுவடையச் செய்கிறது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்டிரால் ( LDL) அளவை குறைக்கிறது. அதனால் உடல் பருமனும் குறைகிறது. HDL எனும் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. வைட்டமின் E இதில் அதிகம் இருப்பதால் என்றும் இளமையான தோற்றத்தையும் கொடுக்காப்புளி அளிக்கும். கொடுக்காப்புளி விதையில் Triterpene Saponins உள்ளதால் மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

இது கிருமிநாசினியாகவும், காச நோயை எதிர்க்கும் ஒரு எளிய மருந்தாகவும் பயன்படுகிறது. கொடுக்காப்புளி மரத்தின் பட்டை பேதி, சீதபேதி, மலச்சிக்கல் மற்றும் காசநோய்க்கு உகந்த மருந்து. கொடுக்காப்புளி இலையின் சாறு அஜீரணக் கோளாறுகள், தொடர் கருச்சிதைவு மற்றும் கல்லீரல், பித்தப்பை பிரச்னைகள், உள் மற்றும் வெளி காயங்களை சீராக்குகிறது. கொடுக்காப்புளி மற்றும் அதனுடைய விதையை சேர்த்து அரைத்து அந்த விழுதை Eye packகாக உபயோகித்து வருவதால் கண் எரிச்சல் மற்றும் வீக்கம், மற்றும் இதர கண் கோளாறுகளிலிருந்தும் விடுபடலாம். கொடுக்காப்புளி பட்டை மற்றும் இலைகளில் உள்ள Glucosidase & Amylase குளுக்கோஸ் வெளியேற்றத்தை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது. இது காய்ச்சல், மலேரியா மற்றும் மஞ்சள் காமாலையை குணப்படுத்த உதவுகிறது. இளம்பெண்களுக்கு வரக்கூடிய முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குகிறது.

மருந்தாகப் பயன்படுத்தும் முறை

கொடுக்காப்புளி விதையை எடுத்து தோலை நீக்கி, சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ½ கிராம் எடுத்து, ½கி.மில்லித்தூள், ½கி. சீரகப்பொடி உடன் சேர்த்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறு நீங்கும். உப்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, கருஞ்சீரகம், ஏலக்காய் மற்றும் கொடுக்காப்புளியின் சதையை எல்லாவற்றையும் சம அளவாக எடுத்து பொடி செய்து, 2 கிராம் அளவுக்கு தேன் (தேன் கிடைக்காவிட்டால் வெல்லம்) சேர்க்க வேண்டும். இது மலச்சிக்கல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நீரிழிவு, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளையும் தீர்க்கிறது. இதில் அதிக துவர்ப்புச்சுவை இருப்பதால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

க.இளஞ்சேரன்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top