செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில், சங்கிலி குளத்தில் பறவைகளின் வசிப்பிட மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கைக் கோரி புகார்.

IT TEAM
0


பேராவூரணி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில், சங்கிலி குளம் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 15 ஏக்கர் ஆகும். செருவாவிடுதி தெற்கு ஊராட்சியின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த குளம் உள்ளது. இந்த குளத்தினை கடந்த 2 ஆண்டுகளாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து, தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  தூர்வாரியதுடன், நீரையும் சேமித்து பராமரிப்பு செய்து வருகின்றனர். .

இந் நிலையில், கடந்த ஆண்டு ( 2018 ) நவம்பர் மாதம் வீசிய கஜா  புயல் காற்றினால், செருவாவிடுதி பகுதியில் இருந்த பல ஆயிரம் மரங்கள் சாய்ந்தன. இதனால், பல ஆயிரம் பறவைகள் தங்களுக்கான வசிப்பிடமின்றி  அங்கும் இங்குமாக மரங்களை தேடி அலைந்து திரிகின்றன.  இந் நிலையில், சங்கிலி குளத்தில் போதிய அளவு தண்ணீர் வசதி  இருந்ததால், குளத்தில்  இருந்த ஒரு பழமையான நாட்டுக் கருவேல மரத்தில் பல விதமான பறவையினங்கள் இரவு நேரங்களில் வந்து தங்கி செல்ல  தொடங்கின.
             
மரங்கள் ஏலம்
இந்நிலையில், கஜா புயலினை தொடர்ந்து ,  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செருவாவிடுதி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் நிலை ஆதாரங்களில் காய்ந்து போன மரங்களை வெட்டுவதற்காக பேராவூரணி பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஏலம் விடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த ஒருவர் காய்ந்து போன மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கான அனுமதியினை பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது ஊழியர்கள் பலர் செருவாவிடுதி பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தற்சமயம்  ஈடுபட்டு வருகின்றனர்.

பொது மக்கள் எதிர்ப்பு 
இந்நிலையில், செருவாவிடுதி சங்கிலி குளத்தில் இருந்த நாட்டு கருவேல மரத்தினையும் ஊழியர்கள் வெட்டிவிட்டனர். இது குறித்து  தகவல் அறிந்த செருவாவிடுதி கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பேராவூரணி பொதுப்பணித்துறை அதிகாரி ராஜமாணிக்கம், மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.  பொதுப்பணித்துறையினர் ஏலம் விடாத  சங்கிலி குளம் உட்பட பல இடங்களில் உள்ள நல்ல  பல  மரங்களையும், அனுமதியின்றி ஏலம் எடுத்தவர்கள் வெட்டியிருப்பது விசாரணையில்  தெரியவந்தது.
                   
நடவடிக்கை
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்களை அனுமதி இன்றி வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலர் ராஜமாணிக்கம் உத்தரவின்  பேரில், துறை ஊழியர்  ராமன் என்பவரும் , செருவாவிடுதி கிராம மக்கள் சார்பிலும்,  திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம்போல தங்குமிடத்திற்கு வந்த பறவைைகள், தங்கள் வாழிடமான கருவேல மரங்கள் வெட்டப்பட்டு, தங்களது கூடுகள் சிதைக்கப்பட்டு கிடந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்து கீச்சிட்டு குரல் எழுப்பியவாறு, அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வந்தது காண்போர் கண்களை உருக்கும் விதமாக இருந்தது. சற்று நேரத்தில் பறவைகள் அங்கிருந்து வேறு இடம் தேடி பறந்து சென்றது.

நன்றி: அதிரை நியூஸ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top