50 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி பிரச்னைக்கு கலாம் சொன்ன தீர்வு!

Unknown
0

காவிரி நீர் மீதான தமிழகத்தின் உரிமையை ஒவ்வொரு ஆண்டும் போராடிப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால், ' இதற்கான தீர்வைப் பற்றி தமிழக, கேரள, கர்நாடக சட்டசபைகளில் பேசியிருக்கிறார் அப்துல் கலாம். அதை செயல்படுத்துவதற்குக்கூட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை' என்கிறார் அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்.


காவிரி விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, இன்று மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சிகளின் பந்த் நடந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்வரத்து தாமதமானதால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பொய்த்துப் போய்விட்டது. இதனால் பெரும் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் விவசாயிகள். " காவிரி நீர் பிரச்சினை என்பது 42 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக உச்ச நீதிமன்றமே இந்தப் பிரச்னையைக் கையாண்டு வருகிறது. இதைச் சொல்வதற்குக் காரணம், மத்திய அரசிடம் இருந்தோ கர்நாடக அரசிடம் இருந்தோ நமக்கு உரிய நியாயம் கிடைப்பதில்லை" எனக் கொந்தளிப்போடு பேசுகிறார் 'அப்துல் கலாம் விஷன் இந்தியா' அமைப்பின் வெ.பொன்ராஜ். இதுகுறித்து விரிவாகவே நம்மிடம் பேசினார்.

" தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள 31 அணைகளின் மொத்த கொள்ளளவு 51.59 பில்லியன் கனமீட்டர். இதுவரை, 23.50 பில்லியன் கன மீட்டர் (BCM) கொள்ளளவு கொண்ட அணைகளை கர்நாடகா கட்டியிருக்கிறது. முறையே, ஆந்திரா-17.123 பில்லியன் கனமீட்டர், தெலுங்கானா-2.921 பில்லியன் கனமீட்டர், தமிழ்நாடு-4.229 பில்லியன் கனமீட்டர், கேரளா- 3.829 பில்லியன் கனமீட்டர் கொள்ளளவு உள்ள அணைகளைக் கட்டியிருக்கின்றன. இந்தியா முழுவதிலும் வருடத்திற்கு 1,500 பில்லியன் கனமீட்டர் அளவு தண்ணீர் வெள்ளத்தினால் கடலில் கலக்கிறது. தென்னக நதிகளில் இருந்து வரும் வெள்ளத்தில் மட்டும் 84.9 பில்லியன் கனமீட்டர், அதாவது 3000 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கிறது. 1970-ம் ஆண்டிற்குப் பிறகு 271 டி.எம்.சி கொள்ளவு கொண்ட 6 பெரிய அணைகளை தமிழ்நாடு கட்டியிருக்கிறது. இந்த ஆறு அணைகளில் மேட்டூர் தான் பெரிய அணை. அதன் கொள்ளளவு 2.647 பில்லியன் கன மீட்டர்.


ஒரு நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து, அது பாய்ந்தோடி வரும் பாதையில் உள்ளவர்களை காட்டிலும், அந்த நதி எங்கு முடிவடைகிறதோ, அந்த இடத்தில் வசிக்கும் மக்களின் விவசாய மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு முன்னுரிமை உண்டு என்பது, உலக முழுவதும் பின்பற்றக்கூடிய சட்டமாகும். அந்த உலக வழக்கப்படியே தமிழகம் போராடுகிறது. இந்திய ஜனநாயக நாட்டில் ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலமாக இன்னமும் தமிழகம் போராடிக் கொண்டே இருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டிய சாதாரண கடமையை கூட மத்திய அரசு வேண்டுமென்றே தாமதிக்கிறது. தமிழக முதல்வரின் சட்டப் போராட்டத்தால் ஆறு ஆண்டுகள் கழித்தே வெளியிடப்படுகிறது.

எப்பொழுதெல்லாம் தண்ணீர் பற்றாக்குறை வருகிறதோ, அப்போதெல்லாம் உச்ச நீதிமன்றம் நியாயத்தை சொல்லி தமிழகத்திற்கு அதன் உரிமையான 419 டி.எம்.சி தண்ணீரைவிடச் சொன்னால், உடனே கர்நாடக அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நடப்பது மட்டுமல்ல, கர்நாடகாவில் வாழும் தமிழர்களை தாக்கி, அவர்களது உடமைகளை, வாகனங்களை, கடைகளைத் தாக்கி அழிப்பது வழக்கமாகிவிட்டது. இதுவரை தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர், அரசியல் சாசனப்படியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், செப்டம்பர் 20 வரை, 12000 கன அடி நீர் தினமும் திறந்து விடப்படும் என்று கூறப்படுகிறது. அது தினமும் எவ்வளவு வருகிறது என்பதைப் பற்றிய செய்தி இல்லை. ஆனால், இந்த பிரச்சினைக்கான தீர்வைப் பற்றி டாக்டர் அப்துல் கலாம், தமிழக, கர்நாடக, ஆந்திர, கேரளா அரசுகளிடம் விவாதித்திருக்கிறார். அவர்களது சட்டமன்றங்களிலும் விவாதித்திருக்கிறார். அவரது ஆலோசனையின்பேரில், பேராசிரியர் ஏ.சி.காமராஜுடன் இணைந்து நான்கு மாநிலங்களுக்கான தென்னக நீர்வழிச்சாலை திட்டத்தை வடிவமைத்தோம்.



அதன்படி, கடல்மட்டத்தில் இருந்து பொதுவாக 250 மீட்டர் உயரத்தில் நான்கு மாநில அணைகளையும் மழைப்பிடிப்பு பகுதிகளையும் இணைத்து, நீர் வழிச்சாலைகளை உருவாக்கினால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ,50 ஆயிரம் கோடி வரை செலவாகும் என திட்ட அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறோம். இந்த ஆய்வு அறிக்கை குறித்து, பிரதமர் மோடிக்கும் நான்கு மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். தென்னக நீர்வழிச்சாலை வந்தால் இந்த நான்கு மாநிலத்திலும் வெள்ளத்தால் கடலில் கலக்கும் 3000 டி.எம்.சி தண்ணீரை, எவ்வித பிரச்சினையில்லாமல் பகிர்ந்து கொள்ளலாம்.

அந்த அந்த மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட அணைக்கட்டுகளில் தேக்கிக் கொள்ளும் நீரை தவிர்த்து, இந்த வெள்ளநீரை பகிர்ந்து கொள்ளலாம். அதையும் மீறி 10 முதல் 20 சதவீதம் மட்டுமே கடலில் கலக்கும். இது ஒன்றுதான் பிரச்னைக்குத் தீர்வைத் தரும். இதற்கான சாத்தியக் கூறுகளை நான்கு மாநில முதல்வர்களும் ஆராய வேண்டும். இதை நடைமுறைப்படுத்தத் தொடங்கினால், ஐந்து முதல் 7 ஆண்டுகளுக்குள் தென்னக நீர்வழிச்சாலை பயன்பாட்டிற்கு வரும். தேவையில்லாமல், மக்களை மோத விட்டு, வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால், இது ஒரு வரலாற்று சாதனையாக பார்க்கப்படும். நமக்குத் தேவை தென்னக நீர்வழிச் சாலையா? மீண்டும் கற்காலமா என்பதை அரசுகளே தீர்மானித்துக் கொள்ளட்டும்" என்றார் உறுதியான குரலில்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top