மதுரை மண்ணின் பாசம் ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரருக்கு ஒரு கோயில்.

Unknown
0
வீரத்துக்கும் பாசத்துக்கும் பெயர்பெற்ற மதுரை மண்ணில் ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரருக்கு கோயில் அமைந்திருக்கும்  கதை தெரியுமா உங்களுக்கு..? உணர்வுப்பூர்வமான பாசத்துக்குக் கட்டுப்பட்ட மக்கள் வாழும் கிழக்குச் சீமைப்பகுதியில் சொரிக்காம்பட்டியில்தான் அமைந்திருக்கிறது வீரத்தைப் போற்றும் வகையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், மதுரை மாவட்டத்தில் விவசாயம் செய்வதற்காக  ஒரு செழித்த வண்டல்மண் நிறைந்த பகுதியை நோக்கி, கருத்தமாயனும் அவரது குடும்பத்தினரும் புலம்பெயர்ந்தனர். அதன்பின் கருத்தமாயனின் உறவினர்களும் அந்த நிலப்பகுதியை நோக்கிக் குடிபெயர்ந்துள்ளனர். நிலப்பகுதி ஊரானது அவ்வூர் 'சொரிக்காம்பட்டி' என அழைக்கப்பட்டது.  அந்த ஊரின் மூத்தகுடியாக, ஊரை நிர்மாணித்த 'கருத்தமாயன்' திகழ்ந்தார்.  ஊரின் முக்கியத் தொழிலாக விவசாயம் மாறியது. விவசாயத்தின் தேவைகளுக்காக கால்நடைகள் வளர்க்கப்பட்டன.  உழைத்த களைப்பு நீங்கவும், விவசாயப்பெருங்குடிகளை உற்சாகப்படுத்தவும் ஒரு விளையாட்டாக அவ்வூரில் 'ஜல்லிக்கட்டு' மாறிப்போயிருந்தது.

இப்படி நடக்கும் ஜல்லிக்கட்டுகளில்,  ஊரின் மூத்தகுடியான கருத்தமாயனின் 4 மகன்களில், கடைசி மகனான 'அழகத்தேவனுக்கு' காளைகளை அடக்குவதில் கணக்கிலடங்காத ஆர்வம் இருந்தது. இவருடைய மாடுபிடி ஆர்வத்தை ஊக்குவிப்பவராகவும், உயிர்கொடுக்கும் தோழனாகவும்  இருந்து, 'சமயன்' என்பவர் ஆதரவளித்து வந்தார். இதற்காக பெரும்பாலான காளைமாடுகளின் ஓட்டத்தை, அழகத்தேவனும் சமயனும் உடனிருந்து கணிப்பது இயல்பு. சில நாட்களில் இருவரும் மிகச் சிறந்த மாடுபிடிவீரர்களாக மாறி, தங்களின் தகுதியை வளர்த்துக்கொண்டனர்.

மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ' முடிஞ்சா...இந்த மாட்டைப் பிடிச்சு பாருடா. இது சுத்துப்பட்டு எந்த ஊர்லயும் பிடிபடாத கெத்தான மாடுடா' என மாட்டின் உரிமையாளர்கள் சவால்விடும்  காளைகளைத் தன் லாகவமான திறமையால் அடக்குவது 'அழகத்தேவனுக்கு' அத்துப்படி.  அப்படியிருக்க,மதுரையின் தற்போதைய 'அலங்காநல்லூரைப்போல்', அன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டில் பெரும்புகழ் அடைந்த ஊராக 'விக்கிரமங்கலம்' திகழ்ந்தது. குறுகியகாலத்தில் அந்த ஊரின் காளைகளையே அடக்கிவெற்றி பெற்றிருக்கிறார், ' அழகத்தேவன்'.

இவரின் பெயரும், வீரமும் மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறுகிராமங்களுக்கும் காட்டுத்தீபோல் பரவுகிறது. ஜல்லிக்கட்டுக்காக 'அழகத்தேவன்' சென்ற இடங்கள் எல்லாம் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. இவருக்கு என ஒரு பெரும்ரசிகர்கள் கூட்டம் உருவாகிறது.   இதனை அறிந்த அருகில் உள்ள 'கீழக்குயில்குடி' கிராமத்தைச் சேர்ந்த மூத்த மாடுபிடிவீரர்கள் சிலர், இது தங்களுக்கு இழுக்கு என எண்ணுகின்றனர். அழகத்தேவனை வீழ்த்த, அவர் கலந்துகொள்ளும்  ஜல்லிக்கட்டு போட்டிகளில் எல்லாம்  கலந்துகொண்டு 'அழகத்தேவனின் திறமையை நேரில் கண்டு, அவரின் யுக்தியை கணிக்கின்றனர்.

அவரை தோற்கடிக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கில், பல்வேறு கோணங்களில் சுற்றி, சுற்றி எதிராளியைத் துவம்சம் செய்யும் ஒரு காளையை 'கீழக்குயில்குடி'கிராமத்தைச் சேர்ந்த மூத்த மாடுபிடிவீரர்கள் தயார்படுத்துகின்றனர். அந்த மாட்டை அடக்குபவருக்கு தங்கள் ஊரின் மூத்தகுடியின் பெண்ணைத் தர இருப்பதாக அறிவிக்கின்றனர்.

இந்த சூழ்ச்சி வலை தெரியாமல், கீழக்குயில்குடிக்காரர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ளச் சொல்லி,அழைப்பு அழகத்தேவனுக்குச் செல்கிறது. இதில் மதுரை மண்ணைக் கலக்கிய மாடுபிடிவீரரான 'அழகத்தேவனும்' கலந்துகொள்கிறார்.
 
கீழக்குயில்குடியைச்சேர்ந்த மூத்த மாடுபிடிவீரர்கள் கணித்ததுபோலவே, அவர்கள் தயார் செய்த காளை அழகத்தேவனை ஜல்லிக்கட்டில் பல கட்டமாகப்போக்கு காட்டுகிறது. இடதுபக்கம் குத்தும் என நினைத்து, வலதுபக்கம் அந்த மாட்டைப் பிடிக்க முயலுகிறார், அழகத்தேவன். ஆனால், சற்று சுதாரித்த அந்தக்காளை,அழகத்தேவனின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. இதையறிந்து, உடன்வந்த அழகத்தேவனின் நண்பன் சமயன் மாட்டை, வேறு ஒருதிசையில் தள்ளி, அதன் வேகத்தைக் குறைக்கிறார்.

அப்படியொரு வயிறு அறு நிலையிலும் அந்தகாளையின் திமிலைப்பிடித்து அடக்கி, போட்டியில் வென்றுவிடுகிறார் அழகத்தேவன்.
பின், வென்ற மகிழ்ச்சியில் தரையில் சரிகிறார், 'அழகத்தேவன்'. உடன் குத்திகிழிக்கப்பட்ட வயிற்றிலிருந்து குடலும் வந்து விழுகிறது. இதைக்கண்ட அழகத்தேவனின் நண்பன், சமயன் தான் உடுத்தியிருந்த துணியைக் கிழித்து, அழகத்தேவனின் வயிற்றில் கட்டி,தன் நண்பனைத் தோளில் தூக்கிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக 'சொரிக்காம்பட்டிக்கு' விரைகிறார். சில  நீர்ச்சுனைகள் இருக்கும் பகுதியைக் கடக்கும்போது, நண்பனின் தாகத்துக்கு நீர் கொடுத்து,இளைப்பாற்றி அழைத்துச்செல்கிறார்.

ஒருவழியாக சொரிக்காம்பட்டியில் உள்ள அழகத்தேவனின் 'நந்தவனம்' என்னும் தோட்டத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார். இத்தகவல் அழகத்தேவனின் தந்தையும், மூத்தகுடியுமான கருத்தமாயனுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஊரே சோகத்தில் ஆழ்கிறது. பின், நந்தவனத்தோட்டத்தில் வைத்து, அழகத்தேவனுக்கு வைத்தியம் பார்க்கின்றனர். சிறிதுநாட்களில் அழகத்தேவனும் உடல்நலம் தேர்ந்து, விரைவில் குணமடைந்து வருகிறார்.

இதையறிந்த 'கீழக்குயில்குடி' மூத்த மாடுபிடிவீரர்கள், இவன் மீண்டுவந்தால் மூத்தகுடியின் பெண்ணைக்கேட்டுவிடுவான் என நினைத்து, அழகத்தேவனைக் கொல்ல சதிசெய்கின்றனர். இறுதிக்கட்ட சிகிச்சைக்காக, அழகத்தேவன் சென்ற இடத்தில், தாங்கள் பயிற்றுவித்த வைத்தியர்களை, ஆள்மாற்றி அனுப்பி வைக்கின்றனர். அவர்களும் அழகத்தேவனுக்கு வயிற்றில் கட்டுக்கட்டும்போது 'கள்ளிக்கொழுந்தையும்' வைத்துக் கட்டிவிடுகின்றனர். இதனால், அழகத்தேவனுடைய உடல்நலம் சிறிது சிறிதாக குன்றுகிறது. சாவின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார் அந்த மதுரையைக்கலக்கிய மாடுபிடிவீரன். அவரின் கடைசிக்கட்ட ஆசையாக,' தனக்குக் கோயில் எழுப்பவேண்டும். அதன்மூலம் ஜல்லிக்கட்டுப் பற்றிய புரிதல் வரும் சந்ததியினர்களுக்குத் தெரியவேண்டும்'எனத் தன் சொந்தங்களிடம் கூறி மரிக்கிறார்.

அவரின் ஆசையை நிறைவேற்ற கோயில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர், அழகத்தேவனின் வாரிசுகள். அவரின் உயிரைக் காப்பாற்ற உதவிய சமயனுக்கும் சிலை வைத்துள்ளனர். இப்படி நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்த அழகத்தேவனும் சமயனும் வேறு,வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அழகத்தேவனை, தன் தோளில் கிடத்தி சமயன் தூக்கிச்செல்கையில் நீர்பருக இளைப்பாறிய இடங்களில், தற்சமயம் 'கற்கள்' போடப்பட்டு, வழிபட்டுச் செல்கின்றனர் சுற்றுப்புற கிராம மக்கள்.


இந்நிகழ்வுக்குப்பின்னர், சொரிக்காம்பட்டியைச்சேர்ந்தவர்கள் கீழக்குயில்குடி கிராமத்தில் எந்தவொரு சம்பந்தமும் செய்துகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.

கொண்டாடப்படும் திருவிழாக்கள்:

மாட்டுப்பொங்கலின் போதும், புரட்டாசி மாதத்திலும், இக்கோயிலில் இருக்கும் 'கோயில்காளையை' ஊரில் அவிழ்த்துவிட்டு, பொங்கல் இடுவது, இந்த ஊர்மக்களின் வழக்கம்.

பேருந்து வழித்தடம்:

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து, வீரம்பட்டி செல்லும் 64 என எண்கொண்ட பேருந்தில் ஏறி, சொரிக்காம்பட்டியில் இறங்கலாம். செக்காணூரணி என்னும் ஊருக்குச்  சென்று, அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் பயணித்து சொரிக்காம்பட்டிக்குச் செல்லலாம்.

இப்படி ஜல்லிக்கட்டுக்காக நின்று,வென்று, வீழ்ந்த மாடுபிடிவீரனுக்கு கோயில் அமைத்ததில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்  தமிழர்தம் பாசத்தையும்.. வீரத்தையும்..!


 -  ம.மாரிமுத்து ,

படங்கள் - நா.ராஜமுருகன்.Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top