பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம், கொல்லுக்காடு நாளை சுனாமி பயிற்சி ஒத்திகை.

Unknown
0


தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் சுனாமி பயிற்சி ஒத்திகை வெள்ளிக்கிழமை (நவம்பர் .24) நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம் மற்றும் பிற கடலோர மாநிலங்களின் சுனாமி முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து ஹைதராபாத்தில் உள்ள இந்தியப் பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமானது ஆந்திரம், மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரி, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொண்ட மாதிரிப் பயிற்சியை வரும் வெள்ளிக்கிழமை நடத்துகிறது.

சுனாமி வரும் நிலையில், இந்தியப் பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் சுனாமி எச்சரிக்கை தொடர்பான முன் அறிவிப்புகள் பெறப்படும்.

இந்த அறிவிப்புகள் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு அரசுத் துறைகள் மூலமாக எவ்வாறு சென்று சேர்க்கப்படும் என்பது வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஒத்திகையின் போது சோதிக்கப்படும்.

ஒத்திகை நடைபெறும் பகுதிகள்:

சென்னை (நயினார்குப்பம், ஊரூக்குப்பம்),
கடலூர் (நாஞ்சலிங்கம்பேட்டை, சின்னூர் தெற்கு),
காஞ்சிபுரம் (கோவளம், பரமன்கேனிக்குப்பம்), கன்னியாகுமரி (ராஜக்காமங்களம், குளச்சல்),
நாகப்பட்டினம் (விழுந்தமாவடி, கீழையூர்),
புதுக்கோட்டை (பொன்னகரம், மீமிசல்),
ராமநாதபுரம் (தேர்போகி, கீழமுந்தல்),
தஞ்சாவூர் (கொல்லுக்காடு, சேதுபாவாசத்திரம்),
தூத்துக்குடி (பழையகாயல், காயல்பட்டினம் தெற்கு),
திருநெல்வேலி (குட்டம்),
திருவள்ளூர் (நாக்கத்தரவு, மொத்திப்பாளையம்),
திருவாரூர் (கற்பகநாதர்குளம்-முனாங்காடு),
விழுப்புரம் (தந்திராயன்குப்பம், நொச்சிக்குப்பம்).

பீதி வேண்டாம்:

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சுனாமி எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சியானது, ஒரு மாதிரி ஒத்திகைப் பயிற்சி மட்டுமே ஆகும். இதனால், பொது மக்கள் அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக இது தொடர்பானஆலோசனைக் கூட்டம் சென்னை எழிலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையாளர் கொ.சத்யகோபால், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பயிற்சி ஆலோசகர் வி.கே.தத்தா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top