பாதை வசதி இல்லாததால் வெளி உலகோடு துண்டிக்கப்பட்ட பாலாவயல் கிராம மக்கள்.

0

பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை ஊராட்சியில் பாலாவயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல பாலா குளத்தின் கரையைத் தான் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். கரை சரியில்லாத இடத்தில் குளத்திற்குள் இறங்கி நடந்து செல்லும் நிலையில் மக்கள் உள்ளனர்.குளம் நிரம்பினால் இடுப்பளவு தண்ணீரில் நீந்தி தான் செல்ல வேண்டும். தற்சமயம் கருவேல மரங்கள் குளத்தின் இருபுறங்களிலும் படர்ந்து கிடப்பதால் நடந்து செல்லும் ஒற்றையடி பாதையாகவே உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் சாலையிலிருந்து தங்கள் கிராமத்திற்கு செல்ல சுமார் 2 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். மாணவ -மாணவிகள் பள்ளிக்கு செல்லவும், பொதுமக்கள் குடிநீர் எடுக்கவும் 2 கி.மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. திடீரென யாருக்கும் உடல் நிலை சரியில்லை என்றாலோ, விஷ பாம்புகள் கடித்தாலோ உயிரை காப்பாற்ற முடியாமல் உயிர் இழக்கும் நிலை ஏற்படுகிறது. அரசு வழங்கும் நலத்திட்டங்கள் எதுவும் கிடைப்பதில்லை. தேர்தல் சமயம் மட்டுமே ஓட்டுக்காக வந்து வாக்குறுதிகளை சொல்லி விட்டு போவதோடு சரி அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் என்று மக்கள் கூறுகின்றனர்.சாலை வசதியில்லாத காரணத்தால் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சிலர் வெவ்வேறு இடங்களுக்கு சென்று குடியேறி வருவதாகவும், வெளியுலகம் தெரியாமல் இருப்பவர்கள் மட்டுமே இங்கு குடியிருந்து வருவதாகவும் கூறுகின்றனர். தற்போது இங்கு 10 குடும்பங்களே வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் எந்த அரசு அதிகாரிகளும் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்க, பாதையில்லாமல் போகவே, பாலாவயல் மக்களை வந்து பார்க்கவோ, நிவாரணங்கள் ஏதும் கொடுக்கவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர். இயற்கை பாதிப்புகள் ஏற்படும் சமயங்களில் அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ இந்த கிராமத்தை சென்று பார்ப்பதோ அல்லது நிவாரணங்கள் கொடுப்பதோ கிடையாது. இங்கு மினி குடிநீர் தொட்டி உள்ளது. அது இயங்கி 5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த மக்களுக்கு குடிநீர் வசதி, பாதை வசதி செய்து கொடுத்து அவர்களின் வாழ்விற்கு ஒளி ஏற்றி தர வேண்டும் என மரக்காவலசை மக்கள் சட்ட உரிமைகள் கழக நிர்வாகிகள் மு.க.பன்னீர்செல்வம், வி.கருப்பையன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: தீக்கதிர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top