தஞ்சை நாணய கண்காட்சி

Unknown
0

தஞ்சையில் நாணய கண்காட்சி நேற்று துவங்கியது. ஏராளமான மாணவர்கள் பழங்கால நாணயங்களை பார்வையிட்டனர். தஞ்சை சோழமண்டல நாணயவியல் கழகம் சார்பில் 16ம் ஆண்டு விழா, 23வது நாணயக் கண்காட்சி தொடக்க விழா தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது.சோழமண்டல நாணயவியல் கழக செயலாளர் குழந்தைசாமி வரவேற்றார்.

தஞ்சை பாரத் கல்விக்குழுமச் செயலாளர் புனிதாகணேசன் தலைமை வகித்தார். சோழமண்டல நாணயவியல் கழக தலைவர் சக்திவேல், நிறுவனர் துரைராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசும்போது, பழங்கால நாணயங்கள், பழங்கால பொருட்கள் மூலம் நமது வரலாற்றை அறிய முடிகிறது.
பண்டைய கால பொருட்கள் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

நாணயச் சேகரிப்பில் மாணவர்கள் ஈடுபட்டு நமது வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் என்றார். இந்த கண்காட்சியில் தஞ்சை பெரிய கோயில் உருவம் அச்சிட்ட ஆயிரம் ரூபாய் நோட்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட ஆயிரம் ரூபாய் பணத்தாள், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி வெளியிடப்பட்ட முதல் ஆயிரம் ரூபாய் நோட்டு, (இந்த ரூபாய் நோட்டு கடந்த 1978ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தது.)

உலகிலேயே மிகப்பெரிய அளவிலான ரஷ்ய நாட்டில் வெளியிட்ட பணத்தாள், தாய்லாந்து நாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது புழக்கத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய பணத்தாள், கானா, வெனிசூலா, இலங்கை, பாகிஸ்தான், எத்தியோப்பியா, இந்தோனேஷியா உட்பட பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

மேலும் தூய வெள்ளியால் செய்யப்பட்ட அஞ்சல்தலை இடம் பெற்றது. சோழர் கால நாணயம், நாயக்கர் கால நாணயம், ஆற்காடு நவாப் வெளியிட்ட நாணயம், புதுக்கோட்டை சமஸ்தானம் வெளியிட்ட அம்மன் காசு, ஷாஜகான் வெளியிட்ட நாணயம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. நம்நாட்டின் அணா நாணயங்கள், 1,2,3,5,10,20,15 பைசா மதிப்பிலான நாணயங்கள், நாணயம் மற்றும் பணத்தாள் தவிர அரியலூரில் கண்டெடுக்கப்பட்ட 12 ஆண்டுகளுக்கு முற்பட்ட உயிரின படிமங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த நாணய கண்காட்சி நாளை நிறைவு பெறுகிறது. நாணய கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பார்வையிட்டனர். சோழமண்டல நாணயவியல் கழக துணைத்தலைவர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top