பேராவூரணிக்கு புதிய பயணியர் மாளிகை
எம்எல்ஏ அசோக்குமார் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு உறுதி
தஞ்சாவூர், ஏப்.26 -
பேராவூரணிக்கு, புதிய பயணியர் மாளிகை கட்டித் தரப்படும் என, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.
அசோக்குமார் எழுப்பிய கேள்விக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், சேதுசாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில், நெடுஞ்சாலை மற்றும் கிராமப் பணித்துறை பயணிகள் தங்கும் விடுதி, முதல் விருந்தினராக அப்போதைய தமிழ்நாடு முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியால் கடந்த 14.09.1972 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த பயணியர் மாளிகையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி போன்ற பெரிய தலைவர்கள் தங்கியிருந்த வரலாறு உண்டு.
இந்நிலையில், இந்த கட்டிடம் 53 ஆண்டுகளைக் கடந்து மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் கசிந்து, விருந்தினர்கள் எவரும் தங்க முடியாத நிலையில் இருந்தது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, "பேராவூரணியில், நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகைக்கு பதிலாக, புதிய பயணியர் மாளிகை அமைத்து தரப்படுமா" என
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார்,
கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை
அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துப் பேசுகையில்," உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும். புதிய பயணியர் விடுதி கட்டித் தரப்படும்" என தெரிவித்தார்.
பேராவூரணியில் புதிய பயணியர் விடுதி கட்டித் தரப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு, தொகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.