காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு.

Unknown
0


காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை பெற அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

காவிரி பிரச்சினையின் இந்த நிலைக்கு காரணம் மத்திய பா.ஜ.க. அரசும், தமிழக அரசும் தான். மத்திய அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்து உள்ளது. அ.தி.மு.க. அரசு நமது உரிமையை அடகு வைத்துள்ளது. சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12–ந் தேதி திறக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு மேட்டூர் அணையை திறக்க போதிய அக்கறை செலுத்தவில்லை.

குறுவை போய்விட்டது, இனி சம்பாவும் போய்விடும் என்ற நிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் தி.மு.க.வும் தன்னை இணைத்துக்கொண்டு போராடியது. அதன் விளைவாக அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. காவிரி பிரச்சினைக்காக கர்நாடக முதல்–மந்திரியையோ, பிரதமரையோ, மத்திய நீர்வளத்துறை மந்திரியையோ தமிழக அரசின் சார்பில் யாரும் சந்திக்கவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் கூட பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

மத்திய அரசு புறக்கணிக்கிறது

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு 6 முறை உத்தரவுகளை வழங்கியது. இதில் முதல் 2 உத்தரவுகளை மட்டும் கர்நாடக அரசு அரைகுறையாக நிறைவேற்றி, மற்ற உத்தரவுகளை மதிக்காமல் தண்ணீர் திறக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றியது. கடைசியாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி 2 ஆயிரம் கனஅடி தண்ணீரையாவது கர்நாடகம் திறந்துவிடுகிறதா? என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்.
இந்த தண்ணீர் போதாது. ஜூன் மாதம் முதல் தற்போது வரை கர்நாடகம் தமிழகத்திற்கு 156 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். அவ்வாறு திறந்துவிட்டு இருந்தால் இந்த போராட்டம் நடந்திருக்காது.

காவிரி மேலாண்மை வாரியம் 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டுக்கு அந்த அதிகாரம் இல்லை என மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தான் இருமாநில நல்லுறவை காப்பாற்றும் ஒருமைப்பாடா? இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினையை பேசி தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் மத்திய அரசு தமிழக விவசாயிகளை புறக்கணிக்கிறது, துரோகம் செய்துள்ளது. இதனை தமிழக விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்.

அ.தி.மு.க.வுக்கு 50 எம்.பி.க்கள் இருந்தும் பிரதமரை சந்திக்க முடியவில்லை. இதற்காக அவர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அங்கு இருக்கும் அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டு வந்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. என்ன தான் அ.தி.மு.க.வாக இருந்தாலும், வேறு கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் தமிழர்கள் என்பதால் உள்ளபடியே நாம் வேதனைப்படுகிறோம், வெட்கப்படுகிறோம்.

தலைமை தாங்கி சென்ற தம்பிதுரை மந்திரி அந்தஸ்தில் உள்ள பாராளுமன்றத்தின் துணை சபாநாயகர். அவருக்கே பிரதமரை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. தமிழக எம்.பி.க்கள் ஒரு அவசர நிலையிலே பிரதமரை சந்திக்க முடியாத நிலையிலே வெட்கப்பட வேண்டிய நிலையிலே இருக்கின்றோம்.

அனைத்துக்கட்சி கூட்டம்

பாலாறு, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளில் அந்தந்த மாநிலங்களில் உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது. தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறது. ஆனால் உரிமையை கேட்டுப்பெறும் தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை.

எனவே இந்த போராட்டத்தை பார்த்தாவது அ.தி.மு.க. அரசு இன்னும் ஒரு சில தினங்களில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அவ்வாறு கூட்டப்பட்டால் தி.மு.க. முழு ஒத்துழைப்பு அளிக்கும். இல்லையென்றால் தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுப்போம்.
விவசாய சங்க பிரதிநிதிகள், ஒத்தகருத்து உடைய கட்சிகளுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தும், தேவைப்பட்டால் ஜனாதிபதியை சந்திக்கும் நிலையை ஏற்படுத்தவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
தற்காலிக முதல்–அமைச்சர்
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் தேறி வரவேண்டும் என்பதே எனது விருப்பம். அதுவரை தற்காலிக முதல்–அமைச்சரையோ? அல்லது துணை முதல்–அமைச்சரையோ நியமித்து காவிரி பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top