தஞ்சாவூர் தட்டு எப்படி தயாராகிறது தெரியுமா.

Unknown
0

தலையாட்டிப் பொம்மை, வீணை வரிசையில் தஞ்சாவூரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று கலைத்தட்டு. கௌரவம், உபசரிப்பு, மரியாதையின் வெளிப்பாடாக கருதப்படும் இந்த கலைத்தட்டில் தஞ்சைக்கே உரித்தான நுண்கலையும், கைத்திறனும், கற்பனையும், தெய்விக அம்சமும் நிறைந்திருக்கிறது. சுவரை அலங்கரிக்கும் தனித் தட்டாகவும், பூஜையறைகளில் வைத்து வணங்கப்படும் இறை உருவாகவும், கேடயங்களாகவும், நினைவுப்பரிசுகளாகவும், சின்னங்களாகவும் உருவாக்கப்படுகிற இந்தக் கலைத்தட்டுக்கு புவிசார் காப்பீட்டு உரிமையையும் கிடைத்துள்ளது.

ராஜராஜ சோழன் காலத்தில் போர் வெற்றிச் செய்திகளையும், மெய்க்கீர்த்திகளையும் தாமிரப் பட்டயங்களில் எழுதும் வழக்கம் இருந்தது. அதன் தொடர்ச்சி தான் இந்தக்கலை.

கோவில்களில் வழிபாட்டுக்குப் பயன்படுத்தும் தட்டுக்கள், குடங்களில் சோழ மரபு சார்ந்த சிற்பங்களை புடைப்பு வடிவத்தில் செய்து. பொருத்துவது வழக்கம். அந்தக் கலையில் மயங்கிய ராஜராஜ சோழன், தட்டுக்களில் தங்களின் சின்னத்தையும், செய்திகளையும் பொதிக்கச் செய்து, சீனாவுக்கும் பிற நாட்டு தோழமை மன்னர்களுக்கும் நினைவுப்பரிசுகளாக அனுப்பினான். ராஜராஜனுக்குப் பிறகு அவருடைய மகன் ராஜேந்திரனும் இந்தக் கலையை உற்சாகப்படுத்தி வளர்த்தான். சோழர்களுக்குப் பிறகு வந்த விஜய நகரத்து மன்னர்களும், மராட்டியர்களும் கூட தஞ்சாவூர் தட்டு உற்பத்தியை தங்கள் பெருமிதமாகக் கருதி வளர்த்தார்கள். அதன்பிறகு இக்கலை பெரும் நசிவைச் சந்தித்தது. தஞ்சாவூர் தட்டு தயாரிக்கும் தொழில் செய்த பலர் அக்கலையை விட்டு விலகி வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள்.

கைவினைப் பொருட்களுக்காகவே உருவாக்கப்பட்ட பூம்புகார் நிறுவனம், கலைத்தொட்டு தொழிலின் கொஞ்ச நஞ்ச உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலைத்தட்டு செய்கிறார்கள். தெற்கு வீதி, கம்மாளர் தெரு, சீனிவாச நகர் போன்ற பகுதிகளில் சிலர் தனித்தனியாக இத்தட்டுக்களை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் வழங்கும் நினைவுப்பரிசுக்கான ஆர்டர்களே இப்போது அதிகம் கிடைக்கிறது.

கலைத்தட்டு என்பது அழகு செய்யப்பட்ட ஒரு பித்தளைத் தட்டு. நடுவில், தூய வெள்ளியில் செய்யப்பட்ட வட்டமான ஒரு தெய்வ உருவம். சுற்றிலும் வெள்ளியும் செம்பும் கலந்த உலோகத்தில் வார்க்கப்பட்ட அலங்கார வளைவுகள். மொத்தமாக அலுமினியத் தகடுகளை வாங்கி, தேவையான சைஸ்க்கு வட்டம் இழுத்து வெட்டி சமப்படுத்திக் கொள்கிறார்கள். பிறகு, டிசைனிங் ஒர்க். பொதுவாக தஞ்சாவூர் தட்டு என்றால் மயில், நடராஜர் உருவம் தான் இருக்கும். இப்போது லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் என எல்லா சாமிகளையும் வைக்கிறார்கள். ஏன்? தலைவர்கள், நடிகர்கள் படங்கள் கூட வைப்பதுண்டு. எல்லாவற்றுக்கும் அச்சுகள் உண்டு.

300 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் வரைக்கும் தஞ்சாவூர் கலைத்தட்டு கிடைக்கிறது. வெளிமார்க்கெட்டில் விலை அதிகமிருந்தாலும், தயாரிக்கும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் கூலி என்னவோ குறைவு தான். ஒரு தட்டுக்கு 30 ரூபாய் கூலி. ஒரு நாளைக்கு 5 தட்டுக்கள் செய்ய முடியும். ஒரு அற்புதமான கலையை கட்டிக்காப்பாற்றும் கலைஞனுக்குக் கிடைக்கும் அதிகப்பட்ச கூலி 150 ரூபாய்.

கலையை மேம்படுத்தவும், பொருளுக்கு விற்பனை வாய்ப்புகளை உருவாக்கித் தரவும், உற்பத்திக்கு தகுந்த விலை பெற்றுத்தரவும் கோருகிறார்கள் கலைத்தட்டு கலைஞர்கள். பெரும்பாலானவர்கள் பொன் வேலைக்குப் போய்விட்டார்கள். சிலர் தொழிலை விட்டே அகன்று தொடர்பில்லாத வேலையைச் செய்கிறார்கள்.

அரசர்கள் பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுத்து காப்பாற்றிய கலை, காப்பார் இன்றி நசிந்து கொண்டே வருகிறது. கைவினைத் தொழில்களுக்காகவும், கலைக்காகவும் இயங்கும் அமைப்புகளும், நிறுவனங்களும் இக்கலைஞர்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்!

நன்றி : வெ.நீலகண்டன்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top