இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கிராமமக்கள் போராட்டம்.

Unknown
0

பேராவூரணி அடுத்த நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரமான விவசாயம் அழிந்துவிடும் என்று அப்பகுதி கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி கடந்த 19 மற்றும் 21-ந் தேதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்தை பார்வையிட சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு அவர்கள் சென்ற காரையும் சிறைபிடித்து வைத்து போராட்டம் நடத்தினர். பின்பு, அவர்களிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தை மீட்டுச் சென்றனர். இதன்தொடர்ச்சியாக அப்பகுதி பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

மேலும் இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெடுவாசல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் போராட்ட களத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். மேலும், அணவயல், வடகாடு, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் ஆதரவு கூட்டம் நடத்தியும், திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள்

இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம், நெடுவாசல் பகுதியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.

இதற்கிடையில் நேற்று நெடுவாசலில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அருகே நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டு, இந்த திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இந்த திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top