கொட்டும் மழையிலும் சுடச்சுட உணவு வழங்கும் நெடுவாசல் மக்கள்! மெய்சிலிர்க்க வைக்கும் உபசரிப்புகள்.

Unknown
0

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல், நல்லாண்டர் கொல்லை, கோட்டைக்காடு உள்ளிட்ட 5 இடங்களில், கடந்த 17 நாள்களாக போராட்டம் தொடர்கிறது. மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவாக நெடுவாசல் மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, ஏராளமான பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து ஆதரவு தருவதால் போராட்டம் தொய்வில்லாமல் நடந்துவருகின்றது.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வருபவர்களை, தங்கள் சொந்த வீட்டு விசேஷத்துக்கு வரும், உறவுகளைப்போல, வரவேற்கும் நெடுவாசல் கிராமமக்கள், வெளியூர் நண்பர்களுக்கு, அங்கேயே சமைத்து “உணவு” பரிமாறுகிறார்கள். போராட்டக்களத்தில், குப்பைகளை சேகரிப்பது முதல் உணவு பரிமாறுவது வரை அனைத்தையும், அந்த கிராமத்து இளைஞர்கள், பெரியவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள்.

கடந்த 3-ம் தேதி விடாமல் கொட்டித் தீர்த்த மழையிலும் நனைந்துகொண்டே சமைத்து, சேறும் சகதியுமாக இருந்த நிலையிலும் மக்களுக்கு, வயிறார சோறு பரிமாறிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது. கடந்த ஆறு நாள்களுக்கும் மேலாக இரவு பகலாக சமையல் பணியை மேற்கொண்டு வரும் பேராவூரணியைச் சேர்ந்த ஏ.எம்.சரவணனிடம் பேசினோம்.

”இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏதாவது விசேஷம் என்றால் நாங்கள்தான் சமையல் செய்து கொடுப்போம். அந்தவகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கிய சில நாள்கள் கழித்து, இந்த ஊரில் முக்கியமானவர்கள் என்னை அழைத்து சமைத்துக்கொடுக்கச் சொன்னார்கள். இந்த ஊரும் மக்களும் நல்லா இருந்தால்தானே, நமக்கும் நல்லதுன்னு, சமைக்க ஒத்துக்கிட்டேன். ஒரு நாள் சமைக்க, 50 ஆயிரம் வரை ஆகும். ஆனால் நான் பணியாளர்களுக்குக் கூலி மட்டும் வாங்கிக் கொடுத்துவிடுகிறேன். அவங்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கு இல்லையா சார். ராத்திரி பகலாக உழைத்தாலும், மன நிறைவாக இருக்கு. இந்தத் திட்டம் வந்தால், இந்தப் பகுதியே வீணாகப் போய்விடும்னு சொல்லுகிறார்கள். வருகிற எல்லோருக்கும் சோறு போடுவதைப் பெருமையா பேசுகிறார்கள். ஆனால் ஊருக்கே சோறுபோடும் விவசாயி மண்ணைக்காக்கப் போராடுகிறார்கள். மனசெல்லாம் கஷ்டமாக இருக்கு சார். இந்தப் போராட்டம் ஜெயிக்கணும். போராடும் மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்றார்.

சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணான பூமாலை, “இது நான் பிறந்த ஊர். நாங்கள் சின்ன வயசாக இருக்கும்போதே, எங்கம்மா இறந்துட்டாங்க. கஷ்டப்பட்டு வளர்ந்தோம். எங்க ஊரைப் பொறுத்தவரை, அப்பா, அம்மா இல்லன்னாகூட, குழந்தைகள், விவசாய வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளும். அப்படித்தான் நாங்கள் வளர்ந்தோம். என்னை பேராவூரணியில் கல்யாணம் பண்ணிக்கொடுத்தாங்க. அங்க அவ்வளவா விவசாயம் இருக்காது. அதனால் எங்க அக்கா, ’மாதாமாதம் நெடுவாசலில் விளையும் காய்கறி, பயிர், நெல்’ என அனுப்பி வைப்பார்கள். அதைவைத்து, டவுனில் வாழ்ந்தாலும் சிரமம் இல்லாமல் வாழ்கிறோம். இப்போது, ‘அப்படி விளையும் நிலங்கள் எல்லாம் வீணாகப்போய்விடும்’னு சொல்கிறார்கள். இவ்வளவு பேர், வேலைவெட்டியை விட்டுட்டு வந்து போராடுகிறார்கள். சென்னை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து, யார் பெற்ற பிள்ளைகளோ, இங்க வந்து எங்க நிலத்தைக் காப்பாற்ற கஷ்டப்படுது. அதான் சரவணன் அண்ணன், சமைக்கக் கூப்பிட்டதில் இருந்து, ராத்திரி பகலா சமைச்சுக்கொடுக்கிறோம். இவ்வளவு பேர், மழை, வெயில் பார்க்காமல் போராடுறாங்க. இந்த அரசாங்கத்துக்கு இரக்கமே இல்லையா..? இந்தப் பாழாய்ப் போன திட்டத்தை ரத்து பண்ணினால் என்ன சார்” என ஆதங்கப்பட்டார்.

விவசாயி சந்திரபோஸ், ‘’எங்க ஊர் தம்பிகள், வெளிநாடுகளில் எண்ணெய்க் கிணறுகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள், இந்தத் திட்டம் பற்றி விளக்கிச் சொன்னபிறகுதான் முழுமையாகத் தெரிந்தது. தொடர்ந்து போராடும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வரும் மக்கள் பசியோடு போகக்கூடாதென்று முடிவுசெய்து, உள்ளூர் பொதுப்பணத்தில் சாப்பாடு சமைத்துப் போட ஆரம்பித்தோம். வெளிநாட்டில் உள்ள எங்கள் கிராமத்து தம்பிகள், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் உதவுகிறார்கள். எங்கள் மண்ணைக் காக்கும் போராட்டம். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களின் பசியைப் போக்குகிறோம் அவ்வளவுதான்'' என்றார்.

இந்த மண்ணைக் காக்கும் போராட்டத்தில், மக்களின் பசியை உணர்ந்த இவர்களின் உபசரிப்பு பலரையும் மெய்சிலிக்க வைக்கிறது.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், ம.அரவிந்த்
நன்றி: விகடன்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top