மரச்செக்கு இயந்திரம் ஆயில் முதல் ஆரோக்கியம் வரை.

Unknown
0

நம்ம தாத்தனும், பாட்டனும் என்னத்த சாதிச்சாங்கனு. எனப் பல முறை சிலர் கோபம் கொப்பளிக்கப் பேசுவது உண்டு. அப்படிப் பேசுபவர்கள் கூட, நமது முன்னோர்கள் செய்து வைத்த எல்லா விஷயங்களிலும் ஒரு நன்மை உண்டு என்று சில நேரங்களில் நினைக்கத்தான் செய்வர். அதற்கு இன்றும் பல சான்றுகள் உள்ளன. நாம் மறந்த சிறு தானியங்கள், பயிர் வகைகள் உட்படப் பல வகைகளை மீண்டும் தேடி எடுத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அப்படி கொண்டாட வேண்டிய விஷயங்களில், மறையப்போகும் தருவாயில் உள்ள மரச்செக்கு இயந்திரமும் ஒன்று. இந்த இயந்திரத்தின் சிறப்பைப் பற்றி தெரிய வேண்டும் என்றால் மரச்செக்கு எண்ணெய் பற்றி முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதனை மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமான எண்ணெயாகத்தான் தெரியும். இக்காலத்தில் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து இருக்கும் பெரிய பெரிய பிராண்டுகளின் எண்ணையில் இருக்கும் மணமும், சுவையும் மரச்செக்கு எண்ணெயின் முன் தவிடு பொடியாகி விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இப்போது புதிது புதிதாகச் சந்தைக்கு வரும் எண்ணெய்கள் 'ஆரோக்கியத்துக்கு உத்திரவாதம்' எனப் பளீரிடும் விளம்பரங்கள் அனைத்தும் இயந்திரங்களின் மூலம் அரைக்கப்பட்ட எண்ணெய்கள்தான்.



கலப்படமற்ற, சுத்தமான இயற்கை குணங்கள் மாறாமல் எண்ணெய் கிடைக்கவே, பாரம்பர்ய முறையைப் பயன்படுத்தி மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. ஆனால், காலப்போக்கில் கால்நடைகள் குறைந்து விட்டதாலும், முறையான கால்நடைகளின் பராமரிப்பு இல்லாமல் போனதாலும் மரச்செக்கு தொழில் நலிந்து விட்டது. இந்தச் செக்கு எண்ணெய்களின் இடத்தைப் பெரிய பெரிய பிராண்டு எண்ணெய்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன. அதற்கேற்ப மரச்செக்குகளின் இடத்தையும் இயந்திரங்கள் ஆக்கிரமித்து விட்டன. ஆனால் இப்போது பாரம்பர்யம் பற்றிய விழிப்புஉணர்வு பெருகி வருவதால் மக்கள் மரச்செக்கு எண்ணெய்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். தற்போது மரச்செக்கில் மாட்டுக்குப் பதிலாக மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மரச்செக்கில் இருக்கும் உரல் உலக்கையானது வாகை மரத்தால் செய்யப்பட்டு இருக்கும். இந்த மரச்செக்கில் பொருட்களை அரைக்கும்போது பிழியப்படும் எண்ணெயும் சூடேறாது, தானியங்களின் வாசனையும் மாறாமல் இருக்கும். இதற்கு காரணம் தரமான ஹியர் பகுதிதான். இந்த ஹியர் பகுதியால் மரச்செக்கு சுழலும்போது சீரான சுழற்சியால் உரல் உலக்கையின் தேய்மானம் குறைகிறது. இதனால், எண்ணெய் அதிகமாக சூடாவது தடுக்கப்படும். ஆனால், முன்னர் இயந்திரத்தில் எண்ணெய் எடுக்கும்போது எண்ணெயில் கை வைக்க முடியாத அளவுக்கு வெப்பமாக இருக்கும். இந்த அளவுக்கு எண்ணெய் வெப்பமானால் அதில் உள்ள உயிர் சத்துக்கள் குறைந்துவிடும் என்பதே உண்மை. இதுபோன்ற இயந்திரத்தில் வழியும் எண்ணெய்களில் பலகாரம் சுடும்போது ஒருமுறைக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. இதுதவிர, இயந்திர எண்ணெயை எடுத்துக் கொள்வதால் உடலுக்குப் பல பிரச்னைகள் வரிசையாக வந்த வண்ணம் இருக்கும். இயந்திர எண்ணெயானது பார்ப்பதற்குப் பளீர் எனத் தோற்றமளிக்கும். அது அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தாக்குப் பிடிக்கும்.

மரச்செக்கு எண்ணெயானது பார்ப்பதற்குச் சிறிது நிறம் குறைவாகக் காணப்படும். நல்ல ருசியுடனும், ஒரு வருட காலமும் தாங்கக் கூடியது. மரச்செக்கு எண்ணெயில் இயற்கையான தானிய மணம் காணப்படும். ஒருமுறை மரச்செக்கு உபயோகப்படுத்தி எடுத்த எண்ணெயை ருசித்தால் அதன் ருசி காலாகாலத்துக்கும் மறக்க மாட்டீர்கள். இதனைத் தற்போதைய தலைமுறையினர் உணர ஆரம்பித்துள்ளனர். மற்ற எண்ணெய்களைக் காட்டிலும், மரச்செக்கு எண்ணெய் சற்று விலை அதிகம்தான். ஆனாலும், மக்கள் ஆரோக்கியத்தைத் தேடி பயணிப்பதால் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. தற்போது பெருநகரங்களில் உள்ள பசுமை அங்காடிகளில் மரச்செக்கு எண்ணெய்கள் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும். மரச்செக்கு எண்ணெயின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் கிடைக்கும் இடங்களைத் தேடி அலைகிறார்கள். தற்போதுகூட மரச்செக்கு என்ற பெயரில் போலி எண்ணெய்களும் சந்தையில் இருக்கிறது, உஷார். மரச்செக்கு நல்ல மணத்துடன் கெட்டித்தன்மை, பிசுபிசுப்புத்தன்மை அதிகமாக இல்லாமை என பல குணங்களைக் கொண்டிருக்கும். மரச்செக்கு எண்ணெய் இந்தச் செக்கில் இருக்கும் உரலும், உலக்கையும் மரத்தால் செய்யப்பட்டு இருக்கும். இதற்காகத்தான் 'வைத்தியருக்குக் கொடுக்க வேண்டியதை வணிகருக்குக் கொடு' என நம் முன்னோர்கள் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காகப் பழமொழியைச் சொல்லியிருக்கிறார்கள். முற்காலத்தில் மரச்செக்கில் இருந்து வெளிவரும் புண்ணாக்குகளைத்தான் இயற்கை உரங்களுடன் கலந்து விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்தனர். நாகரிகம் எனச் சொல்லி நாம் இழந்து கொண்டிருக்கும் பொக்கிஷங்கள் இங்கு ஏராளம். எனவே நாகரிகம் என்ற வார்த்தைக்கு மயங்காமல், முன்னோர்களின் நல்வழியைத் தொடர்வோம்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top