பேராவூரணி அருகே 3 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பெண்கள் கோரிக்கை.

Unknown
0


பேராவூரணி அருகே 3 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பெண்கள் கோரிக்கை வைத்தனர்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தலைமை தாங்கினார். தஞ்சையை அடுத்த நவலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர், மாவட்ட வருவாய் அதிகாரியிடம் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 113 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து இருந்தோம். இதற்குரிய பயிர்க் காப்பீட்டிற்காக பிரிமியத்தொகையும் செலுத்தியிருந்தோம். விவசாயம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1,400–ம், தரிசு நிலத்திற்கு பிரிமியத்தொகை செலுத்தியவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1,400–ம் வழங்கப்பட்டுள்ளது. நெல் சாகுபடி செய்தவர்களுக்கு வழங்கிய தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே பயிர்க் காப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மாவடுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை சுற்றி 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பேராவூரணி அரசு கல்லூரி மாணவிகள் விடுதியும் உள்ளது. இந்த கடைகள் வந்த நாளில் இருந்து எங்கள் பகுதியை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலானோர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டை மறந்து டாஸ்மாக் கடைகளே கதி என்று கிடக்கின்றனர். வெளியூர்களில் இருந்து மது குடிக்க வருபவர்கள் போதை அதிகமாகி உடம்பில் துணிகள் எதுவும் இன்றி வீட்டு வாசலில் விழுந்து கிடக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்து நின்றால் எங்களை ஆபாசமாக பேசுவதுடன், அருவருக்கத்தக்க வகையிலும் நடந்து கொள்கின்றனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்வதுடன், மோட்டார் சைக்கிளில் சென்று இடித்து தள்ளுகின்றனர். இப்படி பல்வேறு இடையூறுகளை நாள்தோறும் சந்தித்து வருகிறோம். வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். கடைகளை மூட வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நாங்கள் சுதந்திரமாக நடமாடவும், இடையூறு இன்றி மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரவும், நிம்மதியாக நாங்கள் வாழவும் 3 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்.

 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top