தென்னையை தாக்கும் கொண்டை வளைதல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறை: விவசாயிகளுக்கு ஆலோசனை.

Unknown
0
தென்னையை தாக்கும் கொண்டை வளைதல் மற்றும் நுனி சிறுத்தல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொண்டை வளைதல் நோயானது போரான்சத்து பற்றாக்குறையால் ஏற்படுகிறது. 3 ஆண்டு வயதுடைய இளம் மரங்களில் காணப்படும். தென்னை இலைகள் சிறுத்து விரிவடையாமலும், இலைகள் இயல்பான நிலையில் விரிவடையாமல் ஒன்றுக்கொன்று பின்னி கொண்டு வெளிவர இயலாத நிலையில் காணப்படும்.

வளர்ந்த மரங்களில் இலைகளின் வளர்ச்சி மிகவும் குறைந்து மட்டைகள் குருத்து பாகத்திலிருந்து வளைந்து காணப்படும். குறைபாடு முற்றிய நிலையில் குரும்பைகள், இளம்கன்றுகள் உதிர்ந்துவிடுகின்றன. இதை நிவர்த்தி செய்ய மரம் ஒன்றுக்கு 50 கிராம் வெண்காரம் (போராக்ஸ்) 2 முறை தொடர்ந்து 3 மாத இடைவெளியில் அளிப்பதால் இலைகள் நன்றாக பிரிந்து வளர்ச்சியடைகிறது. வேர் மூலம் 25 பி.பி.எம் அளவு போரான் கரைசலை செலுத்துவதால் மரம் போரான் குறைபாட்டிலிருந்து உடனடியாக நிவர்த்தியடைகிறது. எனினும் மண்ணில் போராக்ஸ் இடுவது மரத்துக்கு நீண்டகால பலனை கொடுக்கும்.

நுனி சிறுத்தல் நோயானது ஆரம்ப நிலையில் மட்டைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் தோற்றமளிக்கும். இது தொடரும்போது இலை இனுக்குகளில் பச்சையம் குறைந்த சூரியஒளியின் மூலம் தாவர உணவு தயாரித்தல் வெகுவாக தடைபடுகிறது. இதனால் மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மட்டைகளின் நீளம், அகலம் குறைந்து சிறுத்துவிடுகின்றன. மட்டைகளின் எண்ணிக்கை குறைவதுடன் பாலைகளின் உற்பத்தி குறைந்தளவில் சிறுத்தும் காணப்படும். காய்களின் உற்பத்தி எண்ணிக்கை குறைகிறது. மேலும் காய்கள் சிறுத்து, தண்ணீர் வற்றி பருப்பின் அளவு குறைந்து காணப்படும்.

இதை நிவர்த்தி செய்ய ஆரம்ப நிலையில் உள்ள மரங்களை மட்டுமே காப்பாற்ற முடியும். பெர்ரஸ் சல்பேட் 2000 பி.பி.எம் (2 கிராம் 1 லிட்டர் நீரில்) செலுத்தலாம் அல்லது மரம் ஒன்றுக்கு துத்தநாக சல்பேட், தாமிர சல்பேட், மாங்கனீசு சல்பேட், பெர்ரஸ் சல்பேட் மற்றும் போராக்ஸ் இவை ஒவ்வொன்றும் 225 கிராம் மற்றும் அம்மோனியம் மாலிப்டேட் 10 கிராம் ஆகிய நுண்ணூட்ட சத்துக்களை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்தின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். மேலும் 10 நாட்களுக்கு ஒருமுறை கோடையில் தண்ணீர் பாய்ச்சுவது அவசியமாகும். பென்சின் முனை தோற்றத்துடன் காணப்படும் மரத்தை வெட்டி அகற்றிவிட்டு தென்னங்கன்றுகளை மீண்டும் நடுவது நல்லது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top