பேராவூரணி பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்.

Unknown
0


காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு 149 கிலோமீட்டர் தூரத்திற்கு  பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, அறந்தாங்கி வழியாக மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரெயில்பாதையில் 1902-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்கள் மூலம் சென்று நாள்தோறும் ஆயிரக்கணக் கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில்பாதை அமைக்கும் பணியில் முதல் கட்டமாக பட்டுக்கோட்டை முதல் காரைக்குடி வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் கடந்த 2012-ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி கடைசி ரெயில் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.இதையடுத்து பட்டுக்கோட்டை முதல் பேராவூரணி வரை, பேராவூரணி முதல் ஆயிங்குடி வரை, ஆயிங்குடி முதல் அறந்தாங்கி வரை, அறந்தாங்கி முதல் காரைக்குடி வரை என 4 பிரிவுகளாக அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த பாதையில் 30 பாலங்கள், 250-க்கும் மேற்பட்ட சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அறந்தாங்கி, பேராவூரணி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நவீன வசதிகளுடன் ரெயில் நிலையங்களும் கட்டப்பட்டன.

இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில நாட்களாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதிகளில் தண்டவாளங்களின் உறுதித் தன்மை, இரு தண்டவாளங்களும் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய அதிநவீன எந்திரம் கொண்டு வரப்பட்டு, ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த ஆய்வுப்பணிகள் நிறைவடைந்தவுடன், ரெயில்வே உயர்அதிகாரிகள் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை ரெயிலில் சோதனை ஓட்டம் மேற்கொள்வர். அந்த சோதனை ஓட்டத்தில் அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்பட்டால் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டை வரை அகல ரெயில்பாதையில் ரெயில்கள் இயக்கப்படும்.

இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டால் ஏராளமான மாணவ, மாணவிகள், தொழிலாளிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் உள்ளதாக அமையும்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top