பேராவூரணியில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

Unknown
0


பேராவூரணி போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து ஊரகப்பகுதிகளுக்கு பேருந்துகளை சரிவர இயக்கவேண்டும், ஊழியர்கள் பற்றாக்குறையோடு இயங்கும் பேராவூரணி அரசு மருத்துவமனையில் உடனடியாக பணியாளர்களை நியமித்து மருத்துவமனை தூய்மையாக இயங்குவதை உறுதி செய்யவேண்டும், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் வி.சி.முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கொள்கைபரப்புச் செயலாளர் ஆறு நீலகண்டன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் இராசமாணிக்கம், சித்திரவேலு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் வேலுச்சாமி, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், ஆசிரியர் ஆனந்தராஜ், ஆயர் த.ஜேம்ஸ், தா.கலைச்செல்வன், சாமானிய சகாக்கள் சங்கத் தலைவர் சமந்தா, தமிழக மக்கள் புரட்சிக்கழகத்தின் பொறுப்பாளர்கள் வீரக்குடி ராசா, ஒட்டங்காடு மூர்த்தி, பைங்கால் மதியழகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள். நிகழ்வில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொறுப்பாளர் ஆசீர்வாதம், திராவிடர் விடுதலைக்கழகத்தின் பொறுப்பாளர்கள் அ,கோவிந்தன், சுப.செயச்சந்திரன் தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் பொறுப்பாளர்கள் ஏனாதி சம்பத், இரா.மாரிமுத்து, ஆயில் மதியழகன், ஊமத்தநாடு செய்சங்கர், கொன்றை சண்முகம், அ.சுப்பிரமணியன், க.மகேந்திரன், முருகேசன், பாலா, கொன்றை கார்த்திகேயன், மும்மூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
நிகழ்வில் பேசிய ஆறு.நீலகண்டன், "அரசுப் பேருந்துகளை உடனே சரிசெய்து அனைத்து வழித்தடங்களுக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும், தனியார் பேருந்து முதலாளிகளிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பேருந்துகள் இயக்கத்தை நிறுத்தி வைக்கும் பேராவூரணி கிளை மேலாளரின் நடவடிக்கை கண்டணத்திற்குரியது. பேருந்துகளை சரிவர இயக்கவில்லை என்றால் மேலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும்!
நோய்களை பரப்பும் வகையில் சுகாதாரக்கேட்டோடு இயங்கும் அரசு மருத்துவமனையில் போதுமான பணியாளர்களை நியமனம் செய்யவேண்டும், 8 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே பணிசெய்கிறார். தனியார் மருத்துவமனயைில் பணியாற்றிக்கொண்டு அரசு மருத்துவமனையில் சரிவர செயல்படாத மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும், அசவர காலச் சிகிச்சைக்கு போதுமான செவிலியர்கள் இல்லமல் மருத்துவமனை நிர்வாகம் முடங்கிப்போய் உள்ளது. உடனடியா பணியாளர்களை நியமிக்க வேண்டும், இல்லையென்றால் மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம்." என்றார். மேலும், "பேராவூரணி நகருக்குள் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை உடனடியாக அகற்றாவிட்டால் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் அகற்றும் பணியில் ஈடுபடும், அங்கு ஆளும் கட்சிக்காரர்களால் நடத்தப்படும் பார்களை உடனடியாக மூட வேண்டும். நீங்கள் மூடவில்லையென்றால் எங்கள் இயக்கம் அந்த வேலையைச் செய்யும்" என்றார்.
நிகழ்வில் பேசிய மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்," இந்திய அரசு பொதுத்துறைகளை மூடிவிடும் எண்ணத்தில் செயல்படுகிறது. கல்வியையும், மருத்துவத்தையும் தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சியில் இந்திய அரசு முனைப்புகாட்டி வருகிறது. அரசு சேவைத்துறையை மக்கள் விரும்மாத மனநிலையை உருவாக்குவதற்கே இப்ப்போது மருத்துவம், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளிலிருந்து அரசு விலகிக்கொள்ளும் மனநிலையில் போதுமான நிதி ஒதுக்கீடுகள் இல்லாமல் நடத்தி வருகிறது. மக்கள் தங்களுக்கான சேவைகள் தரமாக கிடைக்காத பொழுது மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினரை கேள்வி கேட்க வேண்டும். அதிகாரிகளிடம் சேவைக்கான உத்தரவாதத்தை பெற போராட வேண்டும். மக்கள் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றாத அரசு மக்களாட்சி அரசாக இருக்க முடியாது. கல்வியில் தனியார் முதலாளிகளை அனுமதிப்பதும், மதுக்கடைகளை அரசே நடத்துவதும்தான் அரசின் கொள்கை முடிவாக இருந்தால் குடிமக்களுக்கான அரசாக இல்லாமல், இது குடிகாரர்களுக்கான அரசாக இருக்கிறது என்று பொருள். தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் போட்டித் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு மருத்துவத்தையும், கல்வியையும் இலவசமாக வழங்க வேண்டும். பொதுப் போக்குவரத்தை தரப்படுத்தி மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்" என்றார்.

நன்றி:மெய்ச்சுடர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top