இன்று 13-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்.

Unknown
0
இன்று சுனாமி நினைவு தினம் 13 ஆண்டுகளாகியும் மறையாத ஆழிப் பேரலையின் வடுக்கள்.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி முடித்த பலரும் அடுத்த நாளின் விடியல் தங்களுக்கு மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தும் என நினைத்திருக்க மாட்டார்கள். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் 2004 டிசம்பர் 26-ஆம் தேதி இதே நாளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கியது.
அதன் கோரத் தாண்டவத்தை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சை நடுங்க வைக்கும். சில நிமிடங்களில் ஆழிப் பேரலை ஏராளமானோர் வாழ்க்கையைப் பறித்தது. அதற்கு முன்னர் வேறு எந்த ஆழிப் பேரலையோ, திடீர் இயற்கைச் சீற்றமோ இத்தனை நாடுகளில் இத்தனை பேரை பலி கொண்டது இல்லை. அதுவும், தமிழகத்துக்கு இந்த ஆழிப் பேரலைத் தாக்குதல் என்பது புதிது.
இந்தோனேசியாவில், சுமத்ரா தீவு அருகே 2004 டிசம்பர் 26 அதிகாலை 12.58 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சரிந்தன. நிலநடுக்கத்தை அளக்கும் கருவியான சீஸ்மோகிராப் 8.3 முதல் 10 நிமிடங்கள் வரை நீடித்த நில நடுக்கங்களை இதற்கு முன்னர் எங்குமே பதிவு செய்ததில்லை. உலகில் 2-ஆவது பெரிய அளவாக, ரிக்டர் அளவுமானியில் 9.1 முதல் 9.3 வரை இந்த நிலநடுக்கம் பதிவானது. கடலில் தரைக்கு அடியில் 30 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 1,600 கி.மீ. நீள நிலத் தட்டுகள் சரியக் காரணமாக அமைந்தது. இந்த நிலத் தட்டு சரிந்ததால், அந்த இடத்தில் இருந்த நிலம் பெயர்ந்து அதிவேகமாகக் கடல் நீரைத் தள்ளியது. இதுவே ஆழிப் பேரலையாக உருவாகி, கடற்கரையை நோக்கி ஆக்ரோஷமாக புறப்பட்டு வந்தது.
கடற்கரையோரம் 100 மீட்டர் உயரத்துக்கு எழும்பி உயிர்களையும் உடைமைகளையும் துவம்சம் செய்தது. பூமிப் பந்தை ஒரு செ.மீ., அளவுக்கு அசைத்துப் பார்க்கும் வல்லமையுடன் கூடியதாக இந்த நிலநடுக்கம் அமைந்தது என்றால் அது மிகையில்லை.
லட்சக்கணக்கானோர் பலி: இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் 2.30 லட்சம் பேரை இந்த ஆழிப் பேரலை பலி கொண்டது. தமிழகத்தில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 7 ஆயிரம் பேர் பலியாயினர். இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் உடைமைகளை இழந்தனர்.
தாய், தந்தையரை இழந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனாதையாயினர். பல்வேறு நிவாரணப் பணிகளை அரசும், சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டாலும், இன்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றளவும் உளவியல் சிக்கலில் தவித்து வருகின்றனர்.
இனி எச்சரிக்கையாக இருப்போம்... 2004-ஆம் ஆண்டு ஆழிப் பேரலை தாக்கியபோது இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் இல்லை. இந்தோனேசியா கடல் பகுதியில் இருந்த எச்சரிக்கை கருவியும் செயல்படவில்லை. அத்துடன், இந்தியாவுக்கு ஆழிப் பேரலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அதை அப்போதைய மத்திய அரசு முறையாக அறிவிக்கவில்லை என்ற சர்ச்சையும் உண்டு.
இந்தப் பெரும் துயரச் சம்பவத்துக்குப் பிறகு, இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகள் இப்போது சுனாமி எச்சரிக்கைக் கருவிகளை நிறுவியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டாலோ அல்லது ஆழிப் பேரலைகள் வந்தாலோ உடனடியாக எச்சரிக்கை விடுக்கும் வசதி இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.
13 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அந்த ராட்சத அலைகள் இந்தியக் கடலோரப் பகுதிகளை வந்தடைய 3 மணி நேரம் ஆனது. இப்போது நில நடுக்கம், ஆழிப் பேரலை குறித்த தகவல்களை யுனெஸ்கோ தனது இணையதளத்தின் மூலம் தெரிவிக்கிறது. மேலும், ஒவ்வொரு நாட்டின் பேரிடர் நிர்வாகத் துறைக்கும் தகவல் அனுப்பப்படுகிறது. பொதுமக்களும் ஆழிப் பேரலை குறித்த எச்சரிக்கைத் தகவலை என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top