பேராவூரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதில் மோசடி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிருப்தி.

Unknown
0
பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாவடுகுறிச்சி மற்றும் சொர்ணக்காடு ஊராட்சியில் நடைபெற்று வரும் தனிநபர் கழிப்பறை கட்டுமானப்பணிகளை பார்வையிட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சித்ராவின் அசிரத்தையான செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாவடுகுறிச்சி மற்றும் சொர்ணக்காடு ஊராட்சியில் நடைபெற்று வரும் தனிநபர் கழிப்பறை கட்டுமானப்பணிகளை சனிக்கிழமை அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பொழுது ஆட்சியர் வருகையை தெரிந்து கொண்டு, அரைகுறையாக இருந்த கழிப்பறையை கொத்தனார்களை கொண்டு அவசர அவசரமாக கட்டும் பணியை ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள் மேற்கொண்டனர். சொர்ணக்காடு கிராமத்தில் கழிவறை கட்டும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அரைகுறையாகவும், அவசரகோலத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கண்டறிந்தார். மேலும் முறையாக மேற்கூரை, கதவுகள் அமைக்கப்படாதது, செப்டிக் டேங் ஒரேயொரு சிமெண்ட் உறை கொண்டு அமைக்கப்பட்டிருப்பதற்கும் அதிருப்தி தெரிவித்த மாவட்ட ஆட்சியர் ஒரு டேங்க்கில் 3 சிமெண்ட் உறையும், மற்றொரு டேங்கில் 2 சிமெண்ட் உறையும் அமைக்க அறிவுறுத்தினார். மேலும் இரண்டு டேங்கையும் இணைக்கும் வகையில் பிளாஸ்டிக் குழாய் அமைக்கவும் அறிவுறுத்தினார்.

பணிகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அலுவலக ஓவர்சீயரிடம் எச்சரிக்கை விடுத்தார். அதேபோல் தொகுப்பு வீடு கட்டிடத்தில் பில்லர் அமைக்காமல் கட்டிடம் கட்டப்படுவதற்கும் அதிருப்தி தெரிவித்தார். மேலும் சித்தாதிக்காடு கிராமத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட பொதுவிநியோக கட்டிடம், பயன்பாட்டிற்கு வராமல் மூடிக் கிடப்பதை உடனடியாக திறக்க வட்டார வளர்ச்சி அலுவலரிடம் உத்தரவிட்டார். எப்பொழுதும் சாந்தமாக காணப்படும் மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சித்ராவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து காணப்பட்டார்.

சொர்ணக்காடு கிராம மக்கள் கூறும்போது, "இப்பகுதியில் உள்ள சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் வருவதேயில்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் சேதமடைந்தும் தண்ணீர் வராமலும் உள்ளது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து காணப்படுகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ராவிடம் முறையிட்டால் எதையும் கண்டு கொள்வதில்லை. தனிநபர் கழிப்பறை பணத்தில் ரூ 3 ஆயிரத்திற்கு மேல் லஞ்சமாக கேட்டு பெறுகின்றனர்" என்றனர்.

இந்த ஆய்வின் போது பயிற்சி ஆட்சியர் சிபி செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம், வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவடிவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top