பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 ஆயிரம் சிறப்பு பஸ்கள்.

Unknown
0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல வசதியாக இந்த ஆண்டு 11,983 சிறப்பு பஸ்கள்  இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பண்டிகை நேரத்தில் சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விழாவை கொண்டாடுவது வழக்கம். இதில் பெரும்பாலானோர் ரயில்களையே விரும்புகின்றனர். ரயில்களில் எல்லோருக்கும் இடம் கிடைக்காது என்பதால் சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் பஸ்சில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பண்டிகை மற்றும் முக்கியமான விடுமுறை தினங்களில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.

அந்த வகையில் தமிழக போக்குவரத்து துறை சார்பில், பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்கள் அதிகளவு இயக்கப்பட்டு  வருகிறது. 2017ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் 11,250 சிறப்பு பஸ்களும், தீபாவளிக்கு 11,645 சிறப்பு பஸ்களும் சென்னையில்  இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. இந்த நிலையில், இந்த ஆண்டு ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டேவிதார், இணை செயலாளர் பிரபாகர், கூடுதல் ஆணையர் அருண், இணை கமிஷனர்கள்  சுதாகர், நஜ்மல்ஹோடா உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். கேரள, ஆந்திர மாநில அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்பு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகை நேரத்தில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ் புறப்படும் இடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பொங்கலுக்கு வரும் 11, 12 மற்றும்
13ம் தேதிகளில் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.  அதன்படி, இந்த 3 நாட்களில் தினமும் இயக்கப்படும் 2,275 பஸ்களுடன் முறையே 11ல் 796 சிறப்பு பஸ்கள், 12ல் 1,980 பஸ்கள், 13ல் 2,382 பஸ்கள் என மொத்தம் 3 நாட்களில் 11,983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்து 11, 12, 13ம் தேதிகளில் மொத்தம் 10,437 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக ஜனவரி 15 முதல் 17ம் தேதி வரை மொத்தம் 10,595 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் முடிந்து பிற பகுதிகளில் இருந்து முக்கிய இடங்களுக்கு செல்ல அதே மூன்று நாட்களில் 7,841 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

கடந்த ஆண்டை போல் 300 கி.மீ தூரத்துக்கு மேல் செல்லும் சிறப்பு பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளத்தில்  முன்பதிவு செய்யலாம். 29 சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள்: கணினி மூலம் உடனடி முன்பதிவு செய்யும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 26 சிறப்பு முன்பதிவு கவுன்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து 2 கவுன்டர்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து ஒரு சிறப்பு முன்பதிவு கவுன்டர் என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள் வரும் 9ம் தேதி அமைக்கப்படுகிறது. பஸ்கள் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார்களுக்கு 044-24794709 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

தற்காலிக பேருந்து நிலையங்கள்: 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆந்திரா செல்லும் பஸ்கள் அண்ணாநகர் மேற்கில் உள்ள எம்டிசி பஸ் நிலையத்திலும், இசிஆர் வழியாக திண்டிவனம், கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். பூந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த 4 தட பகுதியில் இருந்து செல்லும் பஸ்களுக்கு 11 முதல் 13ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து செல்ல ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும்.

திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நெய்வேலி, திருவண்ணாமலை உள்பட பிற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வழக்கம் போல் கோயம்பேடு  பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். தாம்பரம் வழியாக பிற வாகனங்கள் செல்ல வேண்டாம்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 11 முதல் 13ம் தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்குழுக்குன்றம், செங்கல்பட்டு வழியாக செல்லலாம். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top