பரிந்துரைக்கப்பட்ட நுண்ணூட்ட உரத்தினை உழுது விதை விதைத்த பின் இருமடங்கு மணலுடன் கலந்து நிலத்தில் மேலாக சீராக தூவ வேண்டும். பின்னர் மிளாரு போட்டு இழுத்துவிட வேண்டும். மகசூலை அதிகரிக்கச் செய்வதில் மாங்கனீசு சல்பேட் முக்கிய காரணியாக செயல்படுகிறது. இதனால் 25 - 30 சதவீதம் வரை மகசூல் கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
எள் பயிரில் நுண்ணூட்ட உரம் இடுவது ஒரு முக்கிய தொழில்நுட்பமாக இருந்த போதிலும் அடியுரமாக சிப்சம் இடுவது மற்றும் பயிரை கலைத்து விடுவது ஆகியன மிக முக்கிய தொழில்நுட்பங்கள் ஆகும். விதை விதைப்பதற்கு முன்பு கடைசி உழவின் போது அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ சிப்சம் இட வேண்டும். சிப்சத்தில் கந்தக சத்து நிறைந்துள்ளதால் அவை எள்ளில் எண்ணெய் சத்து அதிகரிக்க உதவி புரிகிறது. மேலும் விதைத்து நெருக்கமாக முளைத்துள்ள எள் செடியினை 15-20 ஆம் நாள் களை எடுக்கும் போது, முக்கால் அடிக்கு முக்கால் அடி என்ற இடைவெளியில் செடி இருக்குமாறு வைத்து இடையில் உள்ள மீதி செடிகள் அனைத்தையும் கலைத்து விட (வெட்டி விட) வேண்டும். அவ்வாறு செய்வதால் 4 முதல் 5 பக்க கிளைகள் வெடித்து சராசரியாக ஒரு செடியில் 120-லிருந்து 150 வரை காய்கள் உருவாகிறது. இதனால் ஹெக்டேர் மகசூல் சராசரியாக 750 கிலோ வரை பெற முடியும் என்று வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் தெரிவித்துள்ளார்.
