பேராவூரணி வட்டார வேளாண் துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி களத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் தலைமை வகித்து பேசுகையில், 3வயதுடைய இளம் தென்னந்தோப்புகளில் உபரி வருமானம் பெற நிலக்கடலை, உளுந்து, கொடி வகை பயிர், காய்கறி, மலர்ச் செடிகள் ஆகியவை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். வருடத்திற்கு ஜூன்-ஜூலை மற்றும் டிசம்பர்- ஜனவரி மாதம் என 2 முறை பேரூட்டச் சத்துக்களை கொடுக்கக் கூடிய யூரியா, சூப்பர் பொட்டாஷ் மற்றும் இயற்கை உரங்களான அங்கக எரு, வேப்பம் புண்ணாக்கு இடுதல் மற்றும் நுண்ணூட்ட உரமான தென்னை நுண்சத்து மற்றும் தென்னை டானிக் இட வேண்டும். மேலும் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்த ஆமணக்கு புண்ணாக்கு 2 கிலோ, ஈஸ்ட் 5 கிராம்(அல்லது) அசிடிக் அமிலம் 5 மில்லி சேர்த்து நீளவாக்கில் வெட்டப்பட்ட இளம் இலை மட்டை துண்டுகள் போடப்பட்ட பானைகளை ஏக்கருக்கு 30 வீதம் தோப்பில் வைத்து கட்டுப்படுத்தலாம். எருக்குழிகளில் வளர்ந்து வரும் காண்டாமிருக வண்டு இளம் புழுக்களை அழிக்க பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சாணத்தை தெளித்து அழிக்கலாம். ரைனோலூர் என்ற இனக் கவர்ச்சி பொறிகளை எக்டேருக்கு ஒன்று வீதம் வைத்து ஆண், பெண் வண்டுகளை அழிக்கலாம். சொட்டுநீர் பாசனம் அமைக்க ஒரு எக்டேருக்கு ரூ.24,795 மானியம் அனுமதிக்கப்படுகிறது என்றார். வேளாண்மை அலுவலர் எஸ்.ராணி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் எம்.சுரேஷ், வேளாண் உதவி அலுவலர் டி.ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழழகன், சத்யா, வேளாண் உதவி அலுவலர் கே.கார்த்திகேயன் செய்திருந்தனர்.
தென்னையை தாக்கும் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை.
June 25, 2018
0
Tags
Share to other apps