சாக்கடை வாய்க்காலாக மாறிய பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்கால்.

Unknown
0
பேராவூரணி நகரின் நடுவே ஆனந்தவல்லி வாய்க்கால் என்ற காவிரியின் கிளை வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் ஆவணத்தில் உள்ள கல்லணை கால்வாய் மெயின் வாய்க்காலில் இருந்து பிரிந்து, சுமார் 12 கி.மீ. தூரம் சென்று கழனிவாசல் - கொரட்டூர் பகுதியில் முடிகிறது. ஆவணம், ஏனாதிகரம்பை, செங்கமங்கலம், அம்மையாண்டி, மாவடுகுறிச்சி, பொன்காடு, பேராவூரணி, நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல், கொரட்டூர் என பல இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்த இந்த வாய்க்காலை பொதுப் பணித்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால், இந்த வாய்க்கால் கடந்த பல ஆண்டுகளாகவே தண்ணீர் வரத்தின்றி பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்த வாய்க்காலில் பாசனத்திற்காக அமைக்கப்பட்ட துருசு, ஷட்டர்கள் பழுதடைந்து, கவனிப்பாரின்றி விடப்பட்டுள்ளது. விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இதற்காக பலமான குரல் எழுப்பியும் பல போராட்டங்களை நடத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையே உள்ளது. ஊருக்கு அழகு சேர்த்த ஆனந்தவல்லி வாய்க்கால் குப்பைக் கழிவுகளாலும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீராலும் சாக்கடை வாய்க்காலாக மாறிவிட்டது. குறிப்பாக பழைய பேருந்து நிலையம் தொடங்கி செங்கொல்லை, நாட்டாணிக்கோட்டை பகுதிகளில் சாக்கடை நீர் தேங்கி நின்று சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தை அடுத்து, மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவின்பேரில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவல்லி வாய்க்காலை பொக்லைன் இயந்திரம் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரி சுத்தம் செய்தனர்.இருந்த போதிலும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குழாய்களை அகற்ற பொதுப்பணித்துறை அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததே மீண்டும் மீண்டும் சாக்கடை நீர் தேங்க காரணமாக உள்ளது. முறையான இயந்திரங்கள் இல்லாத நிலையில், ஆட்களைக் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது சுத்தப்படுத்தினாலும் கூட பொதுப்பணித்துறை அதிகாரிகளே இதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. மேலும் ஆனந்தவல்லி வாய்க்காலில் குறுக்கே அமைக்கப்பட்ட பாலங்கள், ஆண்டுகள் பல கடந்த நிலையில் வலுவிழந்து உடைந்து போகக்கூடிய நிலையில் உள்ளது. மேலும் வாய்க்காலில் அமைக்கப்பட்ட படித்துறைகள், வாய்க்காலில் இருபக்கமும் அமைக்கப்பட்ட சிமெண்ட் தடுப்பு சுவர் உடைந்தும் சிதிலமடைந்த நிலையிலும் காணப்படுகிறது. குறிப்பாக டாக்டர் காந்தி மருத்துவமனை அருகில் உள்ள பாலம் உடைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம், பல இடங்களிலும் சுவர்கள் இடிந்து விழுந்தும், பாலம் இடிந்து விழும் நிலையிலும் உள்ளது.சீரமைக்கக் கோரிக்கை இதுகுறித்து சிபிஎம் தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் மணக்காடு வீ.கருப்பையன் கூறுகையில், "பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடியும் நிலையில் உள்ள பாலங்களை சரி செய்து புதிதாக அமைக்க வேண்டும். ஷட்டர், துருசு உள்ளிட்ட பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வழிகளை சரிசெய்ய வேண்டும். வாய்க்காலில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாய்க்காலின் கரைகளை பலப்படுத்த வேண்டும். ஆனந்தவல்லி வாய்க்கால் சீர்கேடு காரணமாக கடைமடைப் பகுதியான கழனிவாசல், கொரட்டூர் பகுதிகளில் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் சென்று சேருவதில்லை. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. எனவே, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனடியாக ஆனந்தவல்லி வாய்க்காலை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்" என்றார்.
நன்றி: தீக்கதிர் 
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top