பேராவூரணி அருகே சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பேராவூரணியிலிருந்து நாட்டாணிக்கோட்டை, முடச்சிக்காடு, கைவனவயல், உடையநாடு கடைவீதி வழியாக செல்லும் சாலை சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் இணைகிறது. இந்த இணைப்பு சாலை கைவனவயலிலிருந்து, உடையநாடு கடைவீதி வரை சுமார் 2 கிமீ தூரம் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாகி போக்வரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. உடையநாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒரு தனியார் பள்ளியும் இயங்கி வருகிறது. முடச்சிக்காடு மற்றும் கைவனவயல் அதன் சுற்று வட்டாரத்தை சேரந்த மாணவ, மாணவிகள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இந்த சாலை வழியாக இரண்டு அரசு பேருந்துகள் சென்று வருகின்றன.
மேலும் தனியார் பள்ளி பேருந்துகள் அதிக அளவில் இச்சாலையில் இயக்கப்படுகிறது. மழைக்காலம் தொடங்கிவிட்டால் அனைத்து பேருந்துகளின் இயக்கம் இச்சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இச்சாலையை உடனடியாக சீரமைத்துத்தர வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருக்கிறது.
நன்றி : தினகரன்