பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், அவர்கள் தங்களது வயல்களில் மாடுகளை மேயவிடுகின்றனர்.
பயிர்கள் கருகியது
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியான சோலைக் காடு கிராமத்தில் சுமார் 170 எக்டேர் நிலப்பரப்பில் சம்பா நேரடி விதைப்பு செய்யப்பட்டிருந்தது. இதற்கு சோலைக் காட்டில் உள்ள பெரிய ஏரி மூலம் தான் தண்ணீர் பெறப்பட்டு வந்தது. நடப்பாண்டு பருவ மழை பொய்த்ததால் பெரிய ஏரி முழுமையாக வறண்டு விட்டது. ஏரி பாசனத்தை நம்பி நேரடி விதைப்பு செய்திருந்த பயிர்கள் முழுமையாக கருகி விட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் விவசாயிகள், கருகிய பயிர்களை மாடுகளை விட்டு மேய விடும் அவல நிலையில் உள்ளனர்.
சீமை கருவேல மரங்கள்
இதுகுறித்து சோலைக் காடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், சோலைக்காட்டில் மட்டும் 190 எக்டேரில் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு 170 எக்டேரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டிருந்தது. ஏரி பாசனத்தை நம்பி சாகுபடி செய்யப்பட்டதால் மழையின்றி ஏரி வறண்டதால், பயிர்கள் முழுவதும் கருகி விட்டன. இதனால் வயல்களில் மாடுகளை மேய விட்டு வருகிறோம். இந்த பகுதியில் ஆடு, மாடுகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர். ஒரு குடம் தண்ணீரை ரூ.10 விலை கொடுத்து வாங்குகிறோம். 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோலைக்காடு ஏரியை அரசு இதுவரை தூர்வாராததால், சீமை கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. இந்த சீமை கருவேல மரங்களை அகற்றி ஏரியை கிராமத்தினரே தூர்வார அனுமதிக்க வேண்டும். வறட்சி நிவாரணம் மற்றும் பயிர்க் காப்பீட்டு இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.