புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளதற்கு அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமலே மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் உடனடியாக விவசாயகளின் கருத்துகளை கருத்தில் கொண்டு அத்திட்டத்தை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட 31 இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மத்திய அமைச்சரவே நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துபெற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் தங்கள் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எரிவாயு எடுப்பதற்காக நிலம் கையகப்படுத்தி அங்கு சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைத்து பணி மேற்கொண்டபோது அப்பகுதி விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து இயற்கை எரிவாயு சோதனை பணிகளை சம்மந்தப்பட்ட நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது. கடந்த ஆண்டு நெடுவாசல் கிராமத்தில் மேலும் சில இடங்களில் நிலங்களை கையகப்படுத்த அந்நிறுவனம் முயன்றபோது விவசாயிகள் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் தங்கள் பகுதி விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமலே மத்திய அமைச்சரவை இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இத்திட்டம் குறித்து எவ்விதமான விளக்கத்தையும் சம்மந்தப்பட்ட நிறுவனம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மண்வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டும் முற்றிலும் குறைந்து வேளாண் தொழில் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் இதனால விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பியுள்ள தங்கள் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரும்பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அந்தக் கிராமத்தினர் தெரிவித்தனர்.