பேராவூரணி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்.

Unknown
0

பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் படப்பனார்வயல் கிராமத்தில் அரசு மதுக்கடை கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கடை அருகே பஸ் நிறுத்தம், பள்ளிக்கூடம், அம்மாவாரச்சந்தை, அரவைமில் மற்றும் கடைவீதி உள்ளது. இந்த மதுக்கடையில் மது அருந்துபவர்கள் பெண்களை கேலி செய்வது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நின்று தகராறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து பல முறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை
நேற்று காலை மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த வேணிகலா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோட்ட கலால் அலுவலர் புண்ணியமூர்த்தி, திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த மதுக் கடையை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அதிகாரிகள் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற ஒரு மாதம் கால அவகாசம் தேவை என்றும், வருகிற 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை கூட்டத்தில் இது குறித்து பேசி தீர்வு காணலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top