பேராவூரணியில் களைகட்டும் மொய் விருந்து விழா.
ஜூலை 26, 2017
0
பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி ஆகிய பகுதிகளில் மொய் விருந்து கலாசாரம் இருந்து வந்தது. தற்போது இது, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், சேந்தன்குடி, வடகாடு, மாங்காடு, அணவயல், கொத்தமங்கலம், குளமங்கலம், புள்ளான்விடுதி, நெடுவாசல், மேற்பனைக்காடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியுள்ளது. ஆடி, ஆவணி மாதங்களில் பிரபலமான விழா என்றால் அது மொய் விருந்து விழா தான்.
தமிழகத்தில் “மொய்விருந்து” என்ற பெயரை யாரிடம் சொன்னாலும் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது சின்னக்கவுண்டர் திரைப்படமும், விஜயகாந்தும் சுகன்யாவும் தான், ஆனால் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டப்பகுதிகளில் யாரிடம் “மொய்விருந்து” என்ற வார்த்தையை கூறினாலும் அவர்கள் கூறும் ஒரே வார்த்தை “பேராவூரணி” தான். அது என்ன மொய்விருந்து?? அதுக்கும் பேராவூரணிக்கும் என்ன சம்பந்தம் என அனைவரும் கேட்கலாம்.
ஆடிமாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டும். பொங்கல் வைக்கவும், பால் குடம் எடுக்கவும், கூழ் ஊத்தவும் கூட்டம் கூட்டமாய் மக்கள் படை எடுக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் பேராவூரணி மற்றும் அதன் சுற்றூவட்டாரப்பகுதிகளில் சற்று வித்தியாசமாக மொய்விருந்து விழா களை கட்டத்தொடங்கிவிடும். 1967 ஆம் ஆண்டிற்குப்பிறகுதான் இந்த மொய்விருந்து நடைமுறை அதிகமாக காணப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள பேராவூரணியில் நடைபெறும் வினோத விழாவான மொய்விருந்து தற்போது சேதுபாவாசத்திரம் பகுதிகளிலும் திருச்சிற்றம்பலம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் வரையிலும் பரவிவருகிறது.
தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இது மொய் விருந்து சீசன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த மொய்விருந்து வைபவங்கள் பேராவூரணியில் சில புதிய விதிமுறைகளுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை மொய் போட்டவர்களிடமிருந்து இரண்டு மடங்காக வசூலிக்கும் ‘வசூல் மேளா’வாக நடத்தப்பட்டுவருகிறது. மற்றவர்களுக்கு செய்த மொய் பணத்தை இரண்டுமடங்காக வசூலிப்பதற்காகவே 5 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்பகுதி மக்கள் மொய்விருந்து என்னும் வினோத விழாவை வைக்கிறார்கள்.
இந்த மொய்விருந்து விழா பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆடி, ஆவணி மாதங்களில் நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது, பேராவூரணியில் எல்லா விழா மண்டபங்களிலும் தினந்தோறும் மொய்விருந்து விழா நடைபெறும். இதற்கென பேராவூரணியின் பல இடங்களிலும் ஃபிளக்ஸ் போர்டு வைத்து, பத்திரிகை கொடுத்து மொய் விருந்துக்கு அழைக்கிறார்கள். இதற்கென அச்சிடப்படும் சிறப்பு அழைப்பிதழின் அடியில், ‘என்னால் சிலபேருக்கு இரண்டு மூன்று தடவைகள் மொய் செய்யப்பட் டுள்ளது. எனவே இதையே எனது நேரடி அழைப்பாக ஏற்று விருந்துண்டு மொய் செய்து விழாவை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’ குறிப்பிட்டிருப்பார்கள். பேராவூரணி நகரில் வீதிக்கு வீதி ப்ளெக்ஸ் பேனர்களில் மொய்விருந்து வைப்பவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள்.
இந்த விழாவின் போது பேராவூரணி நகர் முழுவதும் ஆட்டுக்கறி குழம்பும், அரிசி சோறின் வாசனைக்காகவே பலர் மொய்விருந்து நடைபெறும் மண்டபங்களை சுற்றிவருவர். மொய்விருந்தின் போது நெல்லுச்சோறும் ஆட்டுக்கறி குழம்பும் பரிமாறப்படும். இந்தக்குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை. காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் கோழிக்கறியும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மிகச்சில விருந்துகளில் மட்டுமே சைவம் பரிமாறப்படும். அசைவ விருந்துகளில் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு தனியாக சைவ உணவு வழங்கப்படும். ஒரேநாளில் பல மொய்விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பலவீடுகளிலும் சாப்பிடுபவர்கள் உண்டு. சைவ சாப்பாடுகளை கொண்டு மொய்விருந்து நடத்துபவர்களுக்கு அவ்வளவாக மரியாதை இல்லை.
இந்த மொய்விருந்தில் சாப்பிடுபவர்கள் அனைவரும் பந்தி தொடங்கும் போது சாப்பிட தொடங்கவேண்டும், அனைவரும் சாப்பிட்டு பந்தியிலிருந்து எழுந்துவிட்டால் யாரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க கூடாது, உடனே இலையை மூடிவிட்டு எழுந்துவிட வேண்டும். குறிப்பாக மொய் போட்டவர்கள் மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள், இதை கருத்தில் கொண்டு சில புத்திசாலிகள் மொய் சாப்பாடு டோக்கன் கொடுத்துவிடுத்துவிடுவார்கள்.
மொய் வசூல் செய்வதற்காக பல கவுண்டர்கள் செயல்படுவதுண்டு. அள்ளி கொடுக்கும் பணத்தை அண்டாவில் போட்டு பின்னர் கோணியில் கட்டி எடுத்துச் செல்வார்கள் விருந்து கொடுத்தவர்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற மொய்விருந்தில் ஒருவருக்கு ஒருகோடி ரூபாய் வரை வசூலானதாம்.
மூன்று நான்கு பேர்கள் கூட்டாகச்சேர்ந்து மொய்விருந்து நடத்துவது உண்டு. இதனால் தங்களது சாப்பாடு, மண்டபச்செலவு உள்ளிட்ட பல செலவினத்தை குறைத்துக்கொள்வார்கள். சிலர் இதில் ரொம்ப சிக்கனம் பார்த்து ஒரே மொய் பத்திரிக்கையில் 10 பேரின் அழைப்பை இடம்பெறச்செய்வர். மெய்விருந்தின் கதாநாயகனே இந்த மொய்பத்திரிக்கை தான், ஏனென்றால் ஒருவருக்கு நீங்கள் பத்திரிக்கை கொடுக்கவில்லை என்றால், அவர் உங்களுக்கு தர வேண்டிய உங்களது இருமடங்கு பணத்தை திருப்பித்தர மாட்டார். வரவினத்தை தனித்தனியாக மொய் நோட்டு என்னும் சிறப்பு நோட்டில் எழுதிக்கொள்வார்கள். இந்த மொய்வரவை எழுதுவதற்கென பலர் பேராவூரணியில் இருந்துவருகிறார்கள். இந்த மொய்நோட்டில் ஒருவர் மொய் எழுதும் போது அவர் பேராவூரணி என்றால் பேராவூரணி கணக்கிலும், வெளியூர் என்றால் பல ஊர் கணக்கிலும் வரவு வைக்கப்படுவர். மொய்ப்பணத்தை நோட்டில் வரவுவைக்கும் பணியில் மிகநெருங்கியவர்களே ஈடுபடுவார்கள். அதே போல பணத்தை வாங்கி அண்டாவில் போடுவதற்கும் ஒருவர் அமர்ந்திருப்பார்.
.
இதேப்போல பெரிய அளவில் விளம்பரம் செய்து மொய்விருந்து நடத்துவதற்கு முதலீட்டுக்கு கவலைப்பட வேண்டியதில்லை. உள்ளூரில் இருக்கும் அரசு வங்கிகளின் மேலாளர்களின் சொந்தப்பொறுப்பில் கடன் வழங்குவார்கள் விருந்து முடிந்த பிறகு ஒரு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும். சில மொய்விருந்து மண்டபங்களில் வங்கிகளின் ஸ்டால்கள் கூட இடம் பெற்றிருக்கும். மொய்ப்பணத்தை தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, நகரங்களில் புதிய வியாபாரம் தொடங்குதல், புதிய வீடுகட்டுதல், புதிய பஸ்கள் வாங்குதல் என்றெல்லாம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள். பலகுடும்பங்களில் பொருளாதார ஏற்றத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த மொய்விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன. ஒரே நாளில் ஒரே ஊரில் பலமொய்விருந்துகள் நடைபெறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். இதற்காக அவர்கள் கடன்வாங்கி மொய்செய்வது அதிகரித்து வருகிறது. இந்தக்கடனை அடைப்பதற்காகவே பெரும்பாலோரின் மொய்விருந்து வசூல் பயன்படுகிறது என்கிற தகவல் சிந்திக்கக்கூடியது. இது போன்ற நிகழ்வுகளின் போது ஊர்பஞ்சாயத்துகூடி மொய்விருந்து எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.
திருமணத்துக்கு பத்திரிகை வைத் தால்கூட போகாமல் இருந்துவிடலாம். ஆனால், மொய் விருந்து பத்திரிகையை வாங்கி வைத்துவிட்டு போகாமல் இருந்தால் அசிங்கப்பட வேண்டியிருக்கும். ஒருவர் நமக்கு ஏற்கெனவே 1000 ரூபாய் மொய் செய்திருந்தால் திருப்பி அதை இரண்டு மடங்காக 2000 ரூபாய் செய்யவேண்டும். மொய் விருந்துக்கு போகாமல் இருந்துவிட்டால், நமக்காக சமைத்த சாப்பாட்டை மறுநாள் காலையில் கூலி ஆட்கள் மூலம் கொடுத் தனுப்பி மொய் பணத்தை திருப்பிக் கேட்டு அசிங்கப்படுத்திய சம்பவங்களும் ஒரு காலத்தில் நடந்ததுண்டு. இப்போது அதுபோல ‘தரை ரேட்டுக்கு’ அசிங்கப்படுத்தாமல் கொஞ்சம் நாசூக்காக அசிங்கப்படுத்துகிறார்கள். மொய் விருந்து முடிந்த 5-வது நாள், சம்பந்தப்பட்டவரே நேரடியாக வீட்டுக்குப் போய், ‘‘உங்களுக்கு இன்னின்ன தேதிகளில் இவ்வளவு மொய் செய்திருக்கிறேன். அதை முறையாக திருப்பிக் கொடுங்கள்’’ என்று கறாராக கேட்டு வாங்கிப் போய்விடுவார். தனி ஆவர்த்தனம் போதாதென்று கோஷ்டி கானம் வேறு. ஐந்தாறு பேர் சேர்ந்து மண்டபம் பிடித்தும் கூட்டாக மொய் விருந்து கொடுத்து அவரவருக்கு வர வேண்டிய வருமானத்தை தனித் தனியாக பாகம் பிரித்துக்கொள்கிறார்கள்.
இந்த மொய்விருந்து விழாவானது, பல நன்மைகளையும், தீமைகளையும் கொண்டுள்ள விழாவாகவே பலதரப்பட்ட மக்களால் பார்க்கப்படுகிறது. மொய் விருந்துக்கு எதிராக விமர்ச னங்கள் கிளம்பினாலும் அதை நியாயப் படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பேராவூரணி தாலுகா கல்லூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, ‘‘நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள் மொத்தமாக ரெண்டு லட்சம் மூணு லட்சத்தை பார்ப்பது கஷ்டம். அவர்கள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியைச் சிறுகச் சிறுக பலருக்கும் மொய்யாக எழுதுகிறார்கள். தங்களுக்கு மொத்தமாக ஒரு தொகை தேவைப்படும்போது மொய் விருந்து வைத்து வசூலித்துக் கொள்கிறார்கள். இதுவும் ஒருவகை சேமிப்பு. வசூலுக்காக நடத்துவதுபோலத் தெரிந்தாலும், மொய் விருந்துகள் பல குடும்பங்களில் விளக்கேற்றிக் கொண்டிருக்கிறது’’ என்றார்.
இதை மறுத்துப் பேசிய பட்டுக்கோட்டை நகர மார்க்சிஸ்ட் செயலாளர் கந்தசாமி, ‘‘வீட்டில் பிள்ளைகள் இருந்தால் காதுகுத்து, சடங்கு, கல்யாணம் போன்ற திருவிழாக்கள் மூலம் மொய்ப் பணம் வசூலாகிவிடும். பிள்ளை இல்லாதவர்கள் மொய்ப் பணத்தை திரும்பப் பெறுவதற்கும் ஏழைகளுக்கு கைகொடுக்கவும்தான் ஆரம்பிக்கப்பட்டது இந்த மொய் விருந்து பழக்கம். இப்போது காரண காரியம் இல்லாமல் நடக்கிறது. ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் மொய் செய்யப்பட்டிருந்தால், அதை ரூ.20 ஆயிரமாக திருப்பித் தரும் நிலையில் அவர் இருப்பாரா? வீண் கவுரவத்துக்காக கடன் வாங்கி மொய்யை திருப்பிச் செலுத்துவார். இப்படி மொய் விருந்துக்காக கடன் வாங்கிவிட்டு பல குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. இனியும் மொய் விருந்துகள் தேவையா என்று சம்பந்தப்பட்டவர்கள்தான் யோசிக்கவேண்டும்’’ என்றார்.
எது எப்படி இருந்தாலும் பேராவூரணியின் தமிழக அடையாளமாக மாறிப்போன மொய்விருந்து, பேராவூரணியில் பல கோடிகளை புரளவைத்திருக்கிறது என்பது தான் உண்மை.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க