ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
மணிமண்டபம் குறித்து அதன் பொறியாளர் பவன் குமார் கூறும்போது, ஆக்ராவிலிருந்து சிவப்பு நிற கற்கள் மற்றும் மஞ்சள் நிற கற்கள் கொண்டு வரப்பட்டது. 4 காட்சியறைகள் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 700 வகையான மலர்ச் செடிகள் நடபட்டுள்ளது. அவை ஆண்டு முழுவதும் பூக்க கூடியவை. கலாமுக்கு மலர்ச் செடிகள் மிகவும் பிடிக்கும். இதனால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகேயுள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அவரின் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்களில் பிரமாண்டமாகவும், பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் 16 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 50 மீட்டர் நீளம், 50 மீட்டர் அகலத்துடன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600 பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றியதாகக் கூறுகிறார்.
2 புள்ளி 1 ஏக்கர் பரப்பிலான இந்த மணிமண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள மஞ்சள் நிற கிரானைட் கற்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்தும், சிவப்பு நிற கற்கள் ஆக்ராவில் இருந்தும், உட்புறம் பதிக்கப்பட்டுள்ள வெள்ளை கிரானைட் கற்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தும் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும் மணிமண்டபம் உப்புக்காற்றால் பாதிக்கப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் முகப்பு வாயில் கதவு மலேசிய தேக்கு மரத்தால் காரைக்குடி தச்சர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத்தின் உட்புறத்தின் நான்கு மூலைகளிலும் கலாமின் நான்கு விதமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நினைவு மண்டபத்தை சுற்றிலும் வண்ண வண்ண பூச்செடிகளும் பூத்துக்குலுங்குகின்றன.
கலாம் பயன்படுத்திய பொருட்கள், அவரது புகைப்படங்கள், அவரது ஆடை, அக்னி ஏவுகணை மாதிரி போன்றவையும் மணிமண்டபத்தில் இடம்பெற்றுள்ளன. கலாமின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியக் காட்சிகளும், வரைபடங்களும் அரங்கு முழுவதும் நிறைந்துள்ளன.