பேராவூரணி கடைவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றல் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கமிஷன் சனிக்கிழமை ஆய்வு செய்தது.
பேராவூரணி கடைவீதியில் அண்மையில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினர். அப்போது முன்அறிவிப்பு இன்றியும், முறையாக அளவீடு செய்யாமலும் வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படும் வகையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் வர்த்தகர்கள் மறியல் மற்றும் கடையடைப்பில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து பேராவூரணி வட்டாட்சியர் ரகுராமன் தலைமையில் நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனிடையே ஆக்கிரமிப்பு அகற்றுதல் சரிவர நடைபெறவில்லை எனக் கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை மூத்த வழக்குரைஞர் ஐசக்மோகன்லால் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு பேராவூரணி கடைத்தெருவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கடைத்தெருவில் நெடுஞ்சாலைத்துறையினர் மறுஅளவை செய்யும்படியும் கட்டட உரிமையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முறையாக அறிவிப்பு செய்து கால இடைவெளி கொடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலை நிறைவேற்றும்போது பொதுமக்கள் நன்மைக்காக செய்யப்படுவதை உறுதி செய்யும்படியும், கடைகளுக்கு முன் விளம்பரப் பதாகைகள் வைப்பதால் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் அதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, பேராவூரணி வட்டாட்சியர் ரகுராமன், காவல் ஆய்வாளர் அன்பழகன், ஜனார்த்தனன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, உதவி பொறியாளர் ஜெயக்குமார், வர்த்தக கழகத்தலைவர் பி.எஸ். அப்துல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நன்றி: தினமணி
நன்றி: தினமணி