பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை கடைவீதியில் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மதுபான க்கடை இயங்கி வருகிறது.
அருகிலேயே பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதாலும், மதுக்க டைக்கு வருபவர்கள் காலி பாட்டில்களைச் சாலையிலும், தோப்பு பகுதிகளிலும் வீசி உடைத்துச் செல்வதாகவும், பெண்களைக் கேலி, கிண்டல் செய்வதாகவும், இந்த மதுக்கடையினால் சாதிக் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் கூறி மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் குருவிக்கரம்பை கிராம மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த 40 தினங்களுக்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்திச் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வருவாய்த்துறையினர், காவல்துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாகிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்துப் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ரகுராமன் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் 40 தினங்களுக்குள் மதுக்கடை அப்புறப்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் திங்கட்கிழமை காலை குருவிக்கரம்பை கடைவீதியில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு மதுக்கடையைத் திறக்கவிடாமல் போராட்டம் நடத்தினர். இதையடுத்துச் சம்பவ இடத்திற்கு வந்த குருவிக்கரம்பை சரக வருவாய் ஆய்வாளர் தமிழரசி, காவல்துறை பயிற்சி உதவி ஆய்வாளர் த.பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன், தனிப்படை ஏட்டுக்கள் பெத்தபெருமாள், கருப்பையன் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பத்துத் தினங்களுக்குள் கடை உறுதியாக அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த சி.ரமேஷ், பொறியாளர் ஜெயச்சந்திரன், வி.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறுகையில், " சமாதானப் பேச்சுவார்த்தை என்பது வெறும் கண்துடைப்பாக உள்ளது. பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் அரசுத் தரப்பில் ஏமாற்றும் போக்கினைக் கையாண்டு வருகின்றனர். வரும் ஜூலை 12 ஆம் தேதிக்குள் கடையை அப்புறப்படுத்தாவிட்டால், ஆயிரக்கணக்கான பொதுமக்களைத் திரட்டி கடையை முற்றுகையிட்டு, சாலை மறியல் செய்யப்படும்" என்றனர்.
நன்றி : தீக்கதிர்
நன்றி : தீக்கதிர்