காரைக்குடி- திருவாரூர் இடையே உள்ள 145 கி.மீ. ஆங்கிலேயர் ஆட்சியில் 1902 அக்டோபர் 20ல் துவங்கி இங்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
நவம்பர் 11, 2017
0
காரைக்குடி- திருவாரூர் இடையே உள்ள 145 கி.மீ ஆங்கிலேயர் ஆட்சியில் 1902 அக்டோபர் 20ல் துவங்கி இங்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.நகரை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் விவசாயம் முக்கிய தொழில். இதற்கு அடுத்தபடியாக விளங்குவது மீன்பிடி தொழில். ஆங்கிலேயர் ஆட்சியில் அதாவது 114 ஆண்டுகள் முன்பிருந்தே 1902 அக்டோபர் 20ல் துவங்கி இங்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 1902ம் ஆண்டு மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு மீட்டர்கேஜ் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அன்று முதல் பட்டுக்கோட்டை சென்னையுடன் ரயில் மூலம் இணைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி- திருவாரூர் இடையே காரைக்குடி, கண்டனூர் புதுவயல், வாளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயிங்குடி, மேற்பனைக்காடு, பேராவூரணி, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, திருநெல்லிக்காவல், மாவூர், திருவாரூர் ஆகிய 18 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வந்தன. இதில் காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய மூன்றும் சந்திப்பு நிலையங்கள்.
இவ்வழித்தடத்தில் சென்னையிலிருந்து காரைக்குடிக்கு கம்பன் எக்ஸ்பிரசும், சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வரை சேது எக்ஸ்பிரசும் இயக்கப்பட்டது. இதன் மூலம் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இந்த வழித்தடத்தில் பயணித்தனர். இந்த பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் அதிக அளவில் வந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக இருந்தது. இங்கு அதிகமாக விளையும் நெல் , உப்பு, மீன், கருவாடு, தேங்காய் போன்றவை வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்க வசதியாக இருந்தது. இந்தியா முழுவதும் மீட்டர்கேஜ் பாதைகள் ஒழிக்கப்பட்டு அகலப்பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பாதை வசதியை பட்டுக்கோட்டைக்கும் கொண்டு வருவதற்காக 14-3-2012ம் தேதியுடன் இந்த வழித்தடத்தில் மீட்டர்கேஜ் ரயிலுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் அகல ரயில்பாதை வந்து விடும் என இப்பகுதி மக்கள் கனவு கண்டார்கள். ஆனால் 4 ஆண்டுகளும், 4 மாதமும் உருண்டோடியும் இன்னும் அகலப்பாதை பணி முடியவில்லை. சுமார் 145 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடத்தில் அகலப்பாதை பணி நிறைவேற்ற மொத்த திட்ட மதிப்பீடு ரூ.506.73 கோடி என திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் முயல் வேகத்தில் தான் துவங்கியது.
முதல்கட்டமாக காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான புதிய பாலங்கள், கட்டிடங்கள், பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டன.இந்த வழித்தடத்தில் 50 சதவீத பணிகள் தான் முடிந்து உள்ளது. அதன்பின் பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூருக்கு பாதை அமைக்கும் பணி மந்த கதிக்கு சென்று விட்டது. இங்கு 10 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை. 110 ஆண்டுகளாக ரயிலை பயன்படுத்தி வந்த மக்கள் இப்போது தங்கள் ஊர்களில் இருந்து ரயிலில் பயணிக்கும் வாய்ப்பை இழந்து விட்டனர்.இதனால் அன்றாடம் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த பகுதியில் உள்ள 18 ரயில் நிலையங்களிலும் பணியாற்றிய ஊழியர்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர்.
ரயில்வே துறையில் நிதி ஒதுக்கப்பட்டும் ஏன் இந்த பணி மந்தகதியில் நடக்கிறது என விசாரித்தபோது ரயில்வே லைனை உயர்த்த மண் போடவேண்டும். இந்த மண் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. அருகில் உள்ள குளம், ஏரிகளில் இருந்து மண் எடுத்தால் ஏரியும் ஆழமாகும். அதிகமாக நீர் தேக்கலாம். இந்த யோசனை முன்வைக்கப்போதிலும் பணி இன்னும் நடக்கவில்லை. இதிலும் அரசியில் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது. மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். உடனடியாக இந்த பாதை பணிகளை முடித்து அகல பாதையில் ரயிலை இயக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க