காரைக்குடி- திருவாரூர் அகல இரயில் பாதை திட்டப் பணியை விரைந்து முடிக்க - சிபிஎம் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்.

Unknown
0


காரைக்குடி- திருவாரூர் அகல இரயில் பாதை திட்டப் பணியை விரைந்து முடித்து தரவும், பேராவூரணி பகுதியில் நடைபெறும் குற்றச்செயல்களை கண்டு கொள்ளாமலும், அலட்சியமாகவும் நடந்து கொள்ளும் காவல்துறையை கண்டித்தும் சிபிஎம் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி ஒன்றிய 12 ஆவது மாநாடு, பேராவூரணி எம்.எஸ்.விழா அரங்கம்-தீக்கதிர் ஆசிரியர் கே.முத்தையா நினைவரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு ஏ.ராமலிங்கம், ஆர்.தங்கராசு, டி.ஆத்மநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிபிஎம் நகரச்செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.மாணிக்கம் மாநாட்டு கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். ஒன்றியச்செயலாளர் ஆவணம் ஏ.வி.குமாரசாமி வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாலதி, மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். மாநிலக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான கோ.நீலமேகம் நிறைவுரையாற்றினார்.

இம்மாநாட்டில் புதிய ஒன்றியச்செயலாளராக ஏ.வி.குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஆர்.மாணிக்கம், ஏ.ராமலிங்கம், வே.ரெங்கசாமி, எஸ்.பாஸ்கர், எம்.இந்துமதி, எம்.எஸ்.கருப்பையா, கே.ராமநாதன் ஆகியோர் ஒன்றியக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்: 
இம்மாநாட்டில்,"கடந்து 5 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் காரைக்குடி- திருவாரூர் அகல இரயில் பாதை திட்டத்தை விரைந்து முடித்து, வரும் 2018 மார்ச் மாதத்திற்குள்ளாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், துப்புரவு பணியாளர்களை நியமித்து, தட்டுப்பாடின்றி மருந்து, மாத்திரைகள் கிடைக்கவும், மருத்துவமனையை மேம்படுத்தவும், நிறுத்தப்பட்ட கிராமப்புற வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும்.

கரூர், ஈரோடு, சேலம், கோவை, சென்னை, திருச்செந்தூர்  போன்ற இடங்களுக்கு தொலைதூர பேருந்துகளை இயக்க வேண்டும்.

பேராவூரணி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் போதிய காவலர்களை நியமிக்கவும், திருட்டு மற்றும் குற்றச்செயல்கள் நடப்பதை கட்டுப்படுத்தவும், அலட்சியப் போக்குடன் செயல்படும் காவல்துறை மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றியத்தில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். பாசனத்திற்கு கல்லணைக்கால்வாய், புது ஆறு மற்றும் கிளை வாய்க்கால்களில் தொடர்ந்து தண்ணீர் விடவேண்டும். பழுதடைந்த நகர மற்றும் கிராம பகுதி சாலைகளை சீரமைக்க வேண்டும்.

பேராவூரணி நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வரவேண்டும். பேராவூரணியில் மின்மயானம், நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்' எனவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நன்றி:அதிரை நியூஸ்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top