தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிசம்பர்.15 வரை கால நீட்டிப்பு.
டிசம்பர் 06, 2017
0
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிசம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பம் பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டபடி 2018, ஜன. 1 ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு அக்டோபர் 3 இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் மீது சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டச் செயலாக்கப் பணிகள் நவம்பர் 30 முதல் டிசம்பர் 15 வரை நீட்டிக்கப்படுகிறது.
இதன்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் டிசம்பர் 15 ஆம் தேதி வரை, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உரிய படிவங்களுடன் ஒவ்வொரு வீடாகச் சென்று குடும்ப வாரியாக வாக்காளர் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ள உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் உள்ள 1.1.2018 அன்று 18 வயது நிறைவடைந்த அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லம் தேடி வரும் அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இதற்கென தேர்தல் ஆணையம் திறன்பேசி மூலம் இயங்கக்கூடிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. அச்செயலி மூலம் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க