பயன்பாடு இல்லாததால் வீதிக்கு வந்த நெல் குதிர்கள்.
டிசம்பர் 14, 2017
0
பயன்பாடு இல்லாததால் வீடுகளில் இருந்த நெல் குதிர்கள் வீதிக்கு வந்துள்ளது தஞ்சை விவசாயிகளின் நிலையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்பட்டது தஞ்சாவூர் மாவட்டமாகும். ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து தமிழகத்திற்கே நெல் விநியோகி க்கப்பட்டது. தற்போது காவிரியில் தண்ணீர்வரத்து இல்லாததாலும், இயற்கை பொய்த்ததாலும், ஆளும் அரசுகளின் கவனிப்பற்ற நிலையாலும், விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தாலும் முப்போகம் நெல் விளைச்சல் ஒரு போகமாகி, அதுவும் தற்போது கைவிட்டு போன நிலையிலும் உள்ளது.கடைமடைப் பகுதி விவசாயிகளும் தற்போது நெல் விவசாயத்தை கைவிட்டு தென்னை போன்ற பணப்பயிருக்கு மாறி வருகின்றனர். ஒரு காலத்தில் விதை நெல், வீட்டு பயன்பாட்டிற்கான நெல் ஆகியவற்றை சுடப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட தானியக் குதிர்களில் சேமித்து வைப்பது வழக்கம். தற்போது லாபகரமானதாகவும், பயிர் செய்ய ஏற்ற நிலை இல்லை என்பதாலும் விவசாயிகள் தங்கள் தேவைகளுக்கு, அரிசிக்கடைகளில் சென்று கர்நாடக அரிசிகளை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வீடுகளில் தானியங்களை சேமிப்பதற்கு வைத்திருந்த குதிர்கள் தேவையில்லாத நிலை உருவானதால், அதனை வீதியில் குப்பைத் தொட்டியில் வீசி எறியும் நிலை உருவாகி விட்டது. படத்தில் காணப்படும் குதிர்கள் தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த மருங்கப்பள்ளம் கிராமத்தில் காணப்பட்டது. இது விவசாயிகளின் தற்போதைய நிலையை சொல்லாமல் சொல்கிறது என்றே தோன்றுகிறது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க