தஞ்சை மேலவீதியில் உள்ள சங்கரநாராயணசாமி கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, சனீஸ்வரனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதேபோல கொங்கணேஸ்வரர் கோவில், கரந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், வொண்ணாற்றில் உள்ள தஞ்சை புரீஸ்வரர் கோவில், கீழவாசல் பூமாலை வைத்தியநாதன் சாமி கோவில் உள்பட அனைத்து சிவன்கோவில்களிலும் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி சனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக காவலர் குடியிருப்பு வளாகம் அருகே உள்ள தான்தோன்றி அம்மன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி அர்ச்சகர் சீனிவாச சிவாச்சாரியார் தலைமையில் யாகபூஜை நடைபெற்றது. பின்னர் கலசங்களில் இருந்த புனிதநீரால் சனீஸ்வரனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல வல்லம் கடைவீதியில் உள்ள சோழீஸ்வரர் சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.