இவ்விழாவில் சி.மகேந்திரன் பேசியதாவது,"எழுத்துக்கள் நம்மையும் வாசிப்பவர்களையும் வாய்மையால் கழுவி தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர்களின் எழுத்துக்கள் மக்களின் வாழ்வியலை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதாகும். தோழர் பாலசுந்தரம் எழுதிய தேசத்தின் குமுறல் என்ற இந்த நூல் நாட்டில் ஆட்சியாளர்களின் பிடியில் மக்கள் படும் வேதனையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. 'காவிரி உபரியால் பெறுவதல்ல, உரிமையால் பெறவேண்டியது' என்று காவிரி உரிமை குறித்தும், மன்னராட்சி காலந்தொட்டு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள நீர் பாசன முறைகள் குறித்தும் நூல் விரிவாகப் பேசுகிறது. தமிழர்களின் கல்லணை ஐரோப்பியர்கள் கண்களை அகல விரியவைத்தது. நீர் ஓடும் பாதையில் தடுப்பணை கட்டும் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் தமிழர்கள். நீரியல் விரிசல் முறையில் கட்டப்பட்ட கல்லணை உருவாக்கிய தமிழகத்தில் குளம் குட்டைகள் ஆக்ரமிக்கப்படுகிறது. ஏரிகள் களவாடப்படுகிறது. ஆட்சியாளர்களின் அறமற்ற ஆட்சியால் மக்ளின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. மன்னராட்சி காலத்தில் கூட மன்னனின் தவற்றைச் சுட்டிக்காட்ட முடிந்தது. நீதி கிடைத்தது. கண்ணகியின் கேள்விக்கணைகளால் தாக்குண்டு மன்னன் மாண்டுகொண்டு வீழ்ந்தான், மனைவியும் விழுந்து செத்தாள். ஆனால் கல்புர்கி தொடங்கி இன்று நீதி கேட்பவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். இந்நிலை மாற மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய நூல்தான் இந்த தேசத்தின் குமுறல்", என்றார். நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தி.மு.க. ஒன்றியப் பொறுப்பாளர் க.அன்பழகன், தமிழக மக்கள் புரட்சிக் கழக பரப்புரைச் செயலாளர் ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், திராவிடர் விடுதலைக் கழக நகர அமைப்பாளர் தா.கலைச்செல்வன், கவிஞர் மு.ரெ.முத்து உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6vJASkh-imFlCCj9GR-9oCYdKt3f_E2r6a0Qfnbl8MVOTPqDhIxg-cBXKoDnYjxhi8Y-oNXcuCmgRVv0XAZ53_vcpyjlTHWQWYRAH04XK8z3NQux0aVLKE8RaaFCq4lHn5-wbcJ_GgJ8/s1600-rw/25551942_921488091350704_7139168854691501303_n.jpg)