இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். ஏழை, எளிய, பெரும்பாலும் படிப்பறிவற்ற குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்களாக இருப்பதால், தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அக்கறையோடு உள்ளனர்.

இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பிற்கும் அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தலைமையாசிரியர் வீ.மனோகரன் தனது பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சரவணக்குமார், நீலகண்டன், செல்லத்துரை, செல்வகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் ஆகியோருடன், இரவு நேரங்களில் 10, 11, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, இரவு நேரத்தில் படிக்கிறார்களா என கண்காணிப்பதுடன் அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுறை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
அப்பொழுது மாணவர்களின் படிப்புக்கு தேவையான நோட்டு, பேனா போன்றவற்றை அளிப்பதுடன் ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி செயலாற்றி வருகின்றார். சில வீடுகளில் குண்டு பல்புகள் பயன்படுத்தப்படுவதை நேரடியாக பார்த்து சிஎல்எப் பல்ப், டியூப் லைட் அமைக்கவும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார். வசதி இல்லாத குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சொந்த பணத்தில் இருந்து மின்விளக்கு அமைக்க உதவுகின்றனர்.

ஆசிரியர்கள் ஆய்வு செய்த போது இரவு நேரத்தில் 9 மணி வரை விழித்திருந்து படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகளை பெற்றோர் முன்னிலையில் வழங்கி மாணவர்களை கௌரவிக்கின்றனர். அதே நேரத்தில் இரவு நேரத்தில் படிக்காமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம், " இனிமேல் பரிட்சை முடியும் வரை டிவி பார்க்க மாட்டேன்" என உறுதியையும் வாங்குகிறார். தலைமையாசிரியர் வீ.மனோகரனின் செயலால் பெற்றோர்களும் டிவி பார்ப்பதை விட்டுவிட்டு பிள்ளைகளின் படிப்பில் அக்கறை செலுத்த தொடங்கி விடுகின்றனர்.
இதற்கு பெற்றோர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு உள்ளதாக தெரிகிறது. இது பற்றி இப்பள்ளியில் படித்துவரும் 11வது வகுப்பு மாணவி நாகவேணி தந்தை வீராச்சாமி கூறும்போது, தனியார் பள்ளி போன்று மாணவர்கள் மீது அக்கறையுடன் செயல்படும் தலைமையாசிரியர் மனோகரன் இப்பள்ளிக்கு கிடைத்த வரம் என கூறினார். இதனால் குருவிக்கரம்பையில் படித்து வரும் நாடியம், கரம்பக்காடு, முனுமாக்காடு, வாத்தலைக்காடு பகுதி மாணவர்கள் வரும் பொதுத்தேர்வுக்கு மிகுந்த ஆர்வத்துடன் தயார் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரனிடம் கேட்டபோது, " நானும் இதே பள்ளியில் படித்து, இப்பொழுது இங்கேயே தலைமையாசிரியராக உள்ளேன். சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கிராமத்தினர் ஒத்துழைப்பால், பெரிய மாற்றத்தை உருவாக்க திட்டமிட்டோம். மாணவர்களை இரவு நேரங்களில் அவர்களது வீடுகளுக்கே சென்று, படிப்பதை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
இது பொதுத்தேர்வு முடியும் வரை தொடரும். மேலும் மாணவர்களின் உடல்நலன், மற்றும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அக்கறையோடு கவனித்து உளவியல் ஆலோசனை தருகிறோம். பெற்றோர்களும் மாணவர்களின் கல்விக்காக தனிக்கவனம் செலுத்த வேண்டும். சத்தான உணவுகளை தரவேண்டும்.
தொலைக்காட்சிகளை சிறிது காலம் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் அமைதியான சூழலில் படிக்கும் வாய்ப்பை பெற்றோர்கள் ஏற்படுத்தி தரவேண்டும். அரசுப்பள்ளியையும் தனியார் பள்ளி போல மாற்றும் எங்களின் செயல்களுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் ஆதரவாக உள்ளனர். வரும் பொதுத்தேர்வில் எங்கள் மாணவர்கள் சிறப்பிடம் பெறுவர்" என்றார்.
பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லை என்றால் வீடுதேடிச் சென்று காரணம் தெரிந்து, வெறுமனே விடுமுறை எடுக்கும் மாணவர்களை பள்ளிக்கு ஆசிரியர்கள் அழைத்து வந்து விடுவர். ஒருமுறை பள்ளிக்கு கட் அடித்து விட்டு, மொய் விருந்து விழாவில் சாப்பிட உட்கார்ந்திருந்த மாணவனை, அங்கிருந்து அழைத்து வந்த சம்பவங்களெல்லாம் உண்டு என மாணவர் நீலகண்டன் சிரிப்போடு கூறினார்.
தலைமையாசிரியர் மனோகரன், அவருக்கு ஒத்துழைக்கும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் செயலால் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தனித்துவமாக அமைகிறது.
நன்றி: பகத்சிங், நக்கீரன்