தொடர் போராட்டங்களால் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைப்பு.

Unknown
0
தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 19-ந் தேதி பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இந்த பஸ் கட்டண உயர்வு 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

உத்தேசமாக 20 சதவீதம் முதல் 54.54 சதவீதம் வரை பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு வரை, சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்படும் நகர, மாநகர பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயில் இருந்து 19 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டது.

சென்னை மாநகரில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயில் இருந்து 23 ரூபாய் ஆகவும் உயர்ந்தது. இதேபோல், வால்வோ ஏ.சி. பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ல் இருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆகவும் அதிகரித்தது.

வெளியூர்களுக்கு இயக்கப்படும் (புறநகர்) பஸ் கட்டணத்தை பொறுத்தமட்டில், சாதாரண பஸ்களில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.6 ஆக அதிகரிக்கப்பட்டது. 30 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்ய விரைவு பஸ்களில் ரூ.17-ல் இருந்து ரூ.24 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டது. இதேபோல், அதிசொகுசு, இடைநில்லா பஸ்கள், புறவழிச்சாலை இயக்க பஸ்கள் (பைபாஸ் ரைடர்) ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.18-ல் இருந்து ரூ.27 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதே தூரத்திற்கு, அதிநவீன சொகுசு பஸ்களில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.21-ல் இருந்து ரூ.33 ஆகவும், ஏ.சி. பஸ்களுக் கான கட்டணம் ரூ.27-ல் இருந்து ரூ.42 ஆகவும், வால்வோ ஏ.சி. பஸ் கட்டணம் ரூ.33-ல் இருந்து ரூ.51 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் 6 கி.மீ. தூரம் பயணம் செய்ய ரூ.4 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அத்துடன் கூடுதலாக 20 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்பட்டது. இதேபோல், விரைவு பஸ்களில் 30 கி.மீ. தூரத்திற்கு வசூலிக்கப்பட்ட ரூ.20 அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப் பட்டது.

இதன் மூலம், போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.7 கோடி வருவாய் கிடைத்தது. இதனால், தினமும் ரூ.9 கோடியாக இருந்த இழப்பின் அளவு, ரூ.2 கோடியாக குறைந்தது.

ஆனால், இந்த பஸ் கட்டண உயர்வு அதிக அளவில் இருப்பதாக கூறி, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பஸ் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.

பஸ் கட்டண உயர்வை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், “தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. பஸ் கட்டண உயர்வுக்கு தடை இல்லை” என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில், தமிழக அரசு நேற்று திடீரென்று பஸ் கட்டணத்தை சிறிதளவு குறைத்தது. இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

போக்குவரத்து கழகங்களை கடும் நெருக்கடியில் இருந்து மீளச்செய்து, பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கும், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் அவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய சட்டரீதியான பணப்பயன்களை உரிய காலத்தில் வழங்குவதற்கும், விபத்து இழப்பீட்டு தொகை வழங்குவதற்கும், போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்ட ரீதியான பணப்பயன்களை வழங்குவதற்கும், மாதந்தோறும் ரூ.12 கோடி சுங்கக் கட்டணம் கட்டுவதற்கும் மட்டுமே கடந்த 20-1-2018 அன்று பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், பெரும்பான்மையான பொதுமக்களின் வேண்டுகோளினை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தொடர வேண்டிய போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசு நன்கு பரிசீலித்து பஸ் கட்டணங்களை குறைத்து மாறுதல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி, தற்போது சாதாரண பஸ்களில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 60 காசில் இருந்து 58 காசாக குறைக்கப்படுகிறது. விரைவு பஸ்களில் கட்டணம் 80 காசில் இருந்து 75 காசாகவும், சொகுசு பஸ்களில் 90 காசில் இருந்து 85 காசாகவும், அதிநவீன சொகுசு பஸ்கள் (அல்ட்ரா டீலக்ஸ்) 110 காசில் இருந்து 100 காசாகவும், குளிர்சாதன (ஏ.சி.) பஸ்களில் 140 காசில் இருந்து 130 காசாகவும் குறைக்கப்படுகிறது.

சென்னை மாநகர பஸ்களில் (1 முதல் 28 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.4 ஆக குறைக்கப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் ரூ.23-ல் இருந்து ரூ.22 ஆக குறைக்கப்படுகிறது. மேலும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைக்கப்படுகிறது.

அதேபோன்று, மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நகர்ப்புற பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.4 ஆக குறைக்கப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் ரூ.19-ல் இருந்து ரூ.18 ஆக குறைக்கப்படுகிறது. மேலும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைக்கப்படுகிறது.

ஏற்கனவே, 20-1-2018-ல் மாற்றியமைக்கப்பட்ட பஸ் கட்டணத்தினால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்படும் என உத்தேசிக்கப்பட்டு இருந்தது. தற்போது, பஸ் கட்டண குறைப்பால் நாளொன்றுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சராசரியாக ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தொடர்ந்து வழங்கிட மாற்றியமைக்கப்பட்ட இப்புதிய பஸ் கட்டண விகிதங்களை ஏற்று, தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாற்றி அமைக்கப்பட்ட இப்புதிய கட்டணங்கள் 29-ந் தேதி (இன்று) முதல் அமல் படுத்தப்படும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top