பேராவூரணி வேளாண்மை வட்டாரத்தில் உளுந்து பயிரில் 25 சதவீதம் கூடுதல் மகசூல் பெற டி.ஏ.பி கரைசல் தெளியுங்கள்

Unknown
0

உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் எடுப்பது குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விளக்கியிருப்பதாவது:பேராவூரணி வட்டாரத்தில் சுமார் 500 ஏக்கர் வரை உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உளுந்து பயிர் தற்சமயம் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ளது. இத்தருணத்தில் 2 சதவீத டி.ஏ.பி கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும்.ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊறவைத்து நன்கு கலக்கிவிட வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொண்டு அத்துடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலமாக ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும்.

35-ஆவது நாள் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 45-ஆவது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் ஒரு முறையும் மேற்கண்டவாறு கரைசல் தயாரித்து இரண்டு முறை தெளிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் மண்ணிலிருந்து நேரடியாக மணிச்சத்தை எடுத்துக் கொள்ள முடியாத பயிர்கள், டி.ஏ.பி கரைசல் மூலமாக இலை வழியாக மணிச்சத்து அளிக்கும் பொழுது, பயிர்கள் உடனடியாக மணிச்சத்தை பெறுவதுடன் பயிரில் உருவாகும் பூக்கள் எல்லாம் பிஞ்சுகளாக மாறி, காய்களாக உருவாகி அதில் உள்ள விதைகள் எல்லாம் நல்ல திரட்சியான எடையுடன் கூடிய தரமான மணிகளாக கிடைக்கிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக ஒரு ஏக்கரில் 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக மகசூல் கிடைக்கிறது. எனவே, உளுந்து சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் 2 சதவீத டி.ஏ.பி கரைசல் தெளிப்பு தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து அதிக லாபம் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top