குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் நடக்கும் மாசி திருவிழாவை முன்னிட்டு இங்குள்ள பெரிய குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் கட்டும் பணி தீவிரம்

Unknown
0
கீரமங்கலம் அடுத்த குளமங்கலம் கிராமத்தில் உள்ள வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மிக உயரமான 33 அடி உயர குதிரை சிலை உள்ளது. இந்த குதிரை சிலை வானில் தாவிச் செல்லும் தோற்றத்தில் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழாவின்போது புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதனையொட்டி சிறப்பு பஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

பெரிய குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பது தான் இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக உள்ளது. திருவிழா நாளில் குதிரை சிலையின் உயரத்திற்கு ஏற்றார்போல சுமார் 2 ஆயிரம் காகிதப் பூ மாலைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வருவது உண்டு. இந்த ஆண்டு மாசி திருவிழா வருகிற 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் 33 அடி உயர பெரிய குதிரை சிலைக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் காகிதப்பூ மாலைகள் கட்டும் பணியில் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், மறமடக்கி, திருநாளூர், ஆவணத்தான்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கீரமங்கலத்தில் பல இடங்களில் காகிதப்பூ மாலைகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொத்தமங்கலத்தில் காகிதப்பூ மாலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி ஒருவர் கூறுகையில், மாசி திருவிழாவிற்கு 2 மாதங்களுக்கு முன்பு இருந்தே மாலை கட்டும் பணியில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் இருந்து வண்ண காகிதங்கள் வாங்கி வந்து தேவையான அளவில் வெட்டி மாலையாக கட்டப்படும். ஒரு மாலை குறைந்தது ரூ. 2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. முன்னதாக ஆர்டர் கொடுத்தவர்களுக்கே இப்பொது மாலை கட்டி வருகிறோம் உடனடியாக மாலை வேண்டும் என்று கேட்டால் கிடைக்காது. குதிரை சிலைக்கு மாலை அணிவிக்கும் அழகை காணவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாடல்களில் மாலைகள் கட்டப்படுகிறது. என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top