பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர். அன்றாடங்காய்ச்சிகளான மணல் வண்டி தொழிலாளர்கள் முறையான சங்கங்களின் கீழ், அமைப்பு ரீதியாக செயல்படாமல் உள்ளனர். சொந்த தேவைகளுக்காகவும், வீடு கட்டுவோருக்காக மணல் எடுக்க வாடகைக்கும், சில நேரங்களில் விவசாயப் பணிகளுக்கும் செல்வது இவர்களின் வாடிக்கையாகும். பெரும்பாலான நாட்களில் வேலை இல்லாமல், கூலி வேலைக்கும், விவசாய பணிகளுக்கும் செல்வது வழக்கம்.
டயர் வண்டி சுமார் ரூ 30 ஆயிரம் முதல் ரூ 60 ஆயிரம் வரை தயாரிப்பு செலவாகிறது. இந்த வண்டிகளில் பூட்டப்படும் காளைகள் ஒரு ஜோடி சுமார் ரூ 75 ஆயிரம் முதல் 1.5 இலட்சம் வரை ஆகிறது. எனவே ஒரு வண்டி-மாடு ரூ 1 இலட்சம் முதல் 2 இலட்சம் வரை ஆகிறது. மாடுகள் தீவனம் மற்றும் பராமரிப்பு, மருத்துவ செலவுகள் என தினசரி ரூ 250 செலவாகிறது. சொந்த தேவைகளுக்காக இப்பகுதி காட்டாறுகளில் இருந்து மணல் அள்ளப்பட்டு, ஒரு வண்டி ரூ 500 முதல் 800 வரை விற்கப்படுகிறது. கால்நடைகள் மற்றும் வாகன பராமரிப்பு போக வண்டி உரிமையாளருக்கு ரூ 300 வருமானம் கிடைக்கிறது. இதிலும் தொடர்ச்சியாக தினசரி வேலை கிடைப்பதில்லை. மணல் கடத்தல் என வருவாய்துறை அதிகாரிகள் அடிக்கடி ரெய்டு நடத்துவதால், தொடர்ந்து வேலை கிடைப்பதும் இல்லை.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல தரப்பு புகாரின் பேரில் தாலுகா வருவாய்துறையினர் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து, அடிக்கடி சோதனை நடத்தி மணல் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்கின்றனர். இவ்வாறு வண்டிகளை பறிமுதல் செய்யும்போது, வழக்குப்பதிவு செய்து விட்டு, வண்டிகளை வைத்துக்கொண்டு மாடுகளை மட்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வண்டிகள் காவல்நிலையத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் என 20 க்கும் மேற்பட்ட சுமார் ரூ 15 இலட்சம் மதிப்புடைய டயர் வண்டிகள் மழையிலும், வெயிலிலும் கிடந்து வீணாகி வருகிறது. தொழில் நடத்த முடியாமல், வருமான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாடுகளை பராமரிக்கவும் முடியாமல், தொழிலாளர்கள் திண்டாடி வருகின்றனர். எனவே இப்பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் சுமூக தீர்வு காணவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
பேராவூரணியில் சேதமடைந்து வரும் மணல் மாட்டு வண்டிகள்.
மார்ச் 29, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க