ஆலங்குடி அருகே உள்ள வம்பன் கிராமமானது செழிப்பான பகுதியாகும். இங்கு மலர்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் தென்னை, பலா, வாழை ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.
கஜா புயலால் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். விவசாயமும் பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலர் உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். இதையடுத்து அவர் தனது கடையில் டீ குடித்ததற்காக நீண்ட நாட்களாக கடன் வைத்திருந்த விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கடை பலகையில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.
இது குறித்து சிவக்குமார் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக இந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறேன். புயலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பாக்கித்தொகையை அவர்களால் இப்போதைக்கு திருப்பி வழங்க முடியாது என்று நினைத்தேன்.
அதனால் என்னால் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்யும் வகையில் ஒட்டுமொத்த கடன் பாக்கியையும் தள்ளுபடி செய்து விட்டேன் என்றார். விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடனை தள்ளுபடி செய்த சிவக்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
விவசாயிகள் தங்களது பயிர்க்கடன் தள்ளுபடியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் டீ குடித்த கடனை கடைக்காரர் தானாகவே தள்ளுபடி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone