பேராவூரணி அருகே உள்ள களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
இந்திய அரசின் கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் மூத்த விஞ்ஞானி முனைவர் இரா.வெங்கடேசன் தலைமையில், அவரது குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மா.அருள்முத்தையா, இரா.சுந்தர், ரா.தென்னவன் பங்கேற்று கலந்து கொண்டு 500 மாணவர்கள் மற்றும் 1000 பெற்றோர்களுக்கு மொத்தம் 3,100 தென்னங்கன்றுகள் மற்றும் பல வகையான மரக்கன்றுகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில், உயிர்த்துளி நற்பணி இயக்க நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதன்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் வி.கே.குமார் வரவேற்றார். துறையூர் எல்ஐசி ராமசாமி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முனைவர் இரா.வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு இதுவரை 20 ஆயிரம் தென்னங்கன்றுகள் மற்றும் பல வகையான மரக்கன்றுகளை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.