தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 16–ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து விட்டது.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தஞ்சை பெரியகோவில் அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 கோவில்களுள் ஒன்றாகும்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் தேர் சிதிலமடைந்ததை தொடர்ந்து 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து தஞ்சை பெரிய கோவிலுக்கு புதிதாக தேர் செய்யப்பட்டதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைப்பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், கண்காணிப்பாளர்கள் மாதவன், சுரேஷ், செல்வம், மேற்பார்வையாளர் ரெங்கராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடக்கிறது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16–ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 5.15 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்–கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைவார்கள்.
அங்கு தியாகராஜர்–கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
தஞ்சையில் உள்ள நான்கு ராஜ வீதிகளிலும் தேர் வலம் வரும். நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது. 19–ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.