பேராவூரணியில், வீரியங் கோட்டை அட்லாண்டிக் பன்னாட்டுப் பள்ளி சார்பில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்து ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளி சேர்மன் சீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருள் பிரபாகரன் வரவேற்றார். காவல்துறை உதவி ஆய்வாளர் இல. அருள்குமார் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் க.ஜெய லெட்சுமி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்தவாறும், 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நடந்தும், விழிப்புணர்வு தட்டிகளை கையில் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர். பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து அவற்றை பாதுகாப்புடன் மூட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறு, குழந்தை தவறி விழுந்து மீட்பது குறித்தும், அவற்றை பாதுகாப்புடன் மூடி வைப்பது குறித்த மாதிரி வடிவம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
நன்றி: தீக்கதிர்