தஞ்சாவூர், மார்ச்.22 -
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பேராவூரணியில் துணை ராணுவப் படையினர், காவல் துறையினர் சீருடை அணிவகுப்பு நடைபெற்றது.
தஞ்சை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தலை நேர்மையான முறையில் நடத்தவும், பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காவல்துறை துணை ராணுவ படையினர் இணைந்து அணிவகுப்பில் பங்கேற்றனர். மேலும் காவல்துறையின் வஜ்ரா வாகனமும் இடம்பெற்றது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் முதல் முக்கிய சாலைகள் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை அணிவகுப்பு நடைபெற்றது. பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் பா.பசுபதி, உதவி ஆய்வாளர் புகழேந்தி, துணை ராணுவப்படை அலுவலர் ஓம்வீர்சிங் தலைமையில் நடைபெற்ற பேரணியில், காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.